கள்ளிக்குடி பகுதியில் அமையவிருந்த சிப்காட் திட்டம் ரத்து.. கிராமத்தினரின் கோரிக்கை ஏற்பு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் 598 ஹெக்டேரில் அமையவிருந்த சிப்காட் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவரக்கோட்டை, கரிசல்காலம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி கிராமங்களில் சிப்காட் தொழில்துறை பூங்காவை உருவாக்க, கடந்த 2009ஆம் ஆண்டு 598.66 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்த மூன்று கிராமங்களில் தனித்துவமான கரிசல் மண் இருப்பதால், சோளம், ராகி, தினை, உள்ளிட்ட சிறு தானியங்கள் விளைச்சல் உள்ளதால் இப்பகுதி சிறு தானிய களஞ்சியம் என்று கூறப்படுகிறது.
சுமார் 10 கி.மீ தூரத்தில் கப்பலூர் பகுதியில் ஏற்கனவே சிட்கோ தொழில் பேட்டை செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிப்காட் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments