அழிந்த நீர் வழிப்பாதை.. உயிர் பெறுமா பக்கிங்காம் கால்வாய்?

0 3123
சென்னையின் முக்கிய நீர் வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய், இப்போது கழிவு நீர் கால்வாயாக மாறி, அழியும் ஆபத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் நீர் வழிப் போக்குவரத்து மிகவும் அவசியம் என்ற நிலை உருவாகி இருப்பதால், பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையின் முக்கிய நீர் வழித்தடமாக இருந்த பக்கிங்காம் கால்வாய், இப்போது கழிவு நீர் கால்வாயாக மாறி, அழியும் ஆபத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் நீர் வழிப் போக்குவரத்து மிகவும் அவசியம் என்ற நிலை உருவாகி இருப்பதால், பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு : -

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை அகன்று விரிந்து செல்லும் பக்கிங்ஹாம் கால்வாய், ஒரு காலத்தில் சென்னை மாநகரின் அடையாளமாக திகழ்ந்தது. 420 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நீர் வழித்தடத்திற்கான கால்வாய் வெட்டும் பணி, 1801 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கி, 1882 - ல் நிறைவு பெற்றது.

சீர்மிகு பக்கிங்ஹாம் கால்வாய், 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகே, சீர்கெட்டு அழிவுப் பாதையை நோக்கிச் செல்ல துவங்கியதாக சென்னையின் சீனியர் சிட்டிசன்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

சென்னை மாநகருக்குள் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே எந்த உயிரினமும் வாழ தகுதி இல்லாத கழிவு நீர் கால்வாயாக மாற்றப்பட்டுள்ள பக்கிங்ஹாம் கால்வாய், பிற பகுதிகளை பொறுத்தவரை, சுமார் 80 சதவீதம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சாலைப் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து என முக்கிய போக்குவரத்துக்களை ஒப்பிடும் போது, நீர் வழிப்போக்குவரத்து மிகவும் சிறப்பானது. எரிபொருள் மிச்சம் - குறைவான செலவு - மாசு இல்லாத சுற்றுச்சூழல் என பல நன்மைகள் இருப்பதால், அழியும் ஆபத்தில் இருக்கும் நீர் வழிப்பாதையை மீட்டெடுக்கும் பணியில், அரசின் கவனம் திரும்பி உள்ளது.

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின்உறுப்பினர் செயலாளரால் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு, ஆயிரத்து 281 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றம், மாசுகட்டுப்பாடு, மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட அம்சங்களுடன் பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்வழிகளை மீட்டெடுத்து, உயிர் கொடுக்கும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் களமிறங்கி உள்ளனர்.

திட்டமிட்டபடி, பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டால் பக்கிங்ஹாம் கால்வாயின் மறுசீரமைப்பு பணி, வருகிற 2023 - ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கிங்ஹாம் கால்வாய் உயிர் பெற்றால், நிச்சயம் சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக மாறும் என்பது நிதர்சனம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments