மாஸ்டர் மெகா வசூல்..! படம் இல்லை… பள்ளிக் கூடத்தில்..!
சென்னை வேளச்சேரியில் மாஸ்டர் படத்தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனாவால் திறக்கபடாத பள்ளிக்கு சிறப்பு கட்டணம் பெற்ற மாஸ்டரின் மெகா வசூல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
இந்த வருடம் பள்ளிக்கூடமே திறக்காத நிலையில் எல்.கே.ஜி மாணவர்களுக்கு ஆன் லைன் கல்வி கட்டணமாக 67 ஆயிரம் ரூபாய் வசூலித்த மாபெரும் குற்றச்சாட்டுக்குள்ளான புனித பிரிட்டோ அகாடமி பள்ளியின் தலைவர் மாஸ்டர் சேவியர் பிரிட்டோ இவர் தான்..!
எஸ்.எம்.ஆர் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த பள்ளிக்கூடத்தை சேவை மனப்பான்மையோடு நடத்தி வருவதாக கூறும் சேவியர் பிரிட்டோ, திறக்க படாத தனது பள்ளிக்கூடத்திற்கு இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை வழக்கப்படி வசூலித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
விருப்பம் உள்ள 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அரசு அறிவித்த பின்னர் ஏற்கனவே பள்ளிக்கட்டணம் செலுத்திய மாணவர்களின் பெற்றோர்களிடம் சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் மெகா வசூலில் இறங்கி உள்ளது மாஸ்டர் சேவியர் பிரிட்டோவின் பள்ளி நிர்வாகம்..!
வசதி படைத்த மாணவர்களின் பெற்றோர் சிறப்பு கட்டணத்தை செலுத்திய நிலையில் தனியார் பள்ளி மோகத்தில் ஆர்வக்கோளாறில் கடன் பெற்று தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தி இந்த பள்ளியில் சேர்த்த நடுத்தர வர்க்க பெற்றோர் விழி பிதுங்கிய நிலையில் கையை பிசைந்தபடி பள்ளி நிர்வாகத்திடம் சிறப்பு கட்டணத்தை கட்ட இயலாமல் தவித்துள்ளனர்.
இதையடுத்து சிறப்புக்கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. அதன் படி சிறப்பு கட்டணம் கட்டாத மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் கல்வி சேவையை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஆவேசமான பெற்றோர் பிரிட்டோவின் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.
தங்களை குறைகளை கேட்க கூட அங்குள்ளவர்கள் தயாரக இல்லை யென்றது ஆவேசமான அவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. விரைந்து வந்த காவல்துறையினர் பெற்றோர்களை பேச்சுவார்த்தை நடத்த உள்ளே அழைத்துச்சென்றனர். அங்கு வைத்து ஒவ்வொரு பெற்றோரும் பள்ளி நிர்வாகத்தின் மெகா வசூல் குறித்து அடுக்கடுக்கான புகார் அளித்தனர்.
நான்காம் வகுப்பு படிக்கின்ற மாணவனுக்கு, 3 பருவத்துக்கும் சேர்த்து கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், இதர கட்டணம், நோட்டுக்கள் - பாடபுத்தகம், சீருடை, விளையாட்டு சீருடை என மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாக கூறி மிரளவைத்தனர்.
இதையடுத்து பெற்றோர் தரப்பில் இருந்து இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பெற்றோரின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இது தொடர்பாக பிரிட்டோ அகாடமி பள்ளியின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, பள்ளி நிர்வாகம் குறித்து பெற்றோர் ஆபாச வார்த்தைகளின் திட்டியதாகவும், போராட்டம் நடத்தியவர்கள் சில மாதங்களாக முறையாக கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் என்றும் கல்வி கட்டணத்தை செலுத்த அவர்களுக்கு தவணை வழங்கப்பட்டு இருப்பதாகவும், கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்
திறக்கபடாத தனது பள்ளியில் ஆன் லைனில் கல்வி பயிலும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் கெடுபிடி காட்டும் குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ள மாஸ்டர் சேவியர் பிரிட்டோ, இந்த பள்ளிக்கூடம் மூலம் கல்வி சேவை மட்டும் இல்லாமல், பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கெரி இண்டேவ் என்ற பெயரில் சர்வதேச அளவில் கப்பல் மற்றும் விமான சரக்கு முனையங்களையும், அரை கிரவுண்ட் நிலம் 1 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 30 ஏக்கரில் 85 தனி சொகுசு வில்லாக்களை கொண்ட எஸ்தல் ஓட்டல் குழுமம், டைம்ஸ் லேப்ஸ் உள்ளிட்ட ஏராளமான தொழில்களை நடத்திவருகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக பொங்கல் அன்று 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ள மாஸ்டர் என்ற படத்தையும் சேவியர் பிரிட்டோ பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Comments