200 தொகுதிகள் இலக்கு... மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளைக் கைப்பற்றுவது என்ற இலக்கை நோக்கி, வருகிற புதன்கிழமை முதல், திமுகவின் பிரச்சாரம் தொடங்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வருகிற ஜனவரி முதல் வாரத்தில் இருந்து, தான் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய பிரச்சார உத்திகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மும்முனைத் தாக்குதலை திமுக எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். திமுகவை எதிர்கொள்ள முடியாமல் சிலரைக் கட்டாயப்படுத்திக் கட்சி தொடங்கச் செய்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் ஒரு விழுக்காடுதான் என்பதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், கட்சியினருக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைவதே வெற்றிக்கு முதல் அடித்தளம் எனக் குறிப்பிட்டார்.
திமுக நிர்வாகிகள் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இருநூறு தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்பதே திமுகவின் இலக்கு என்றும், கடுமையாக உழைத்தால்தான் அந்த இலக்கை அடைய முடியும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Comments