பிரதமர் மோடிக்கு ஒரு வாய்ப்பு தந்தால் மேற்குவங்கத்தை 5 ஆண்டுகளில் தங்க வங்கம் ஆக்குவோம்:பிரம்மாண்ட பேரணியில் அமித் ஷா உரை
மேற்குவங்க மாநிலம் போல்பூரில் இன்று நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிரமாண்ட பேரணியில் லட்சகணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ளார்.
சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான இன்று பிர்பூம் மாவட்டம் போல்பூரில் சுற்றுப்பயணம் செய்தார். மதியம் அங்குள்ள பாடகர் ஒருவரின் இல்லத்தில் அமித் ஷா மூத்த தலைவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
இதையடுத்து திறந்த வாகனத்தில் அமித் ஷா பேரணியாக சென்றார். இந்த பேரணியில் பாஜக தொண்டர்கள் லட்சணக்கானோர் கலந்து கொண்டதால், எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகமிருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்தபடி பேசிய அமித் ஷா, பேரணியில் திரளாக கூட்டம் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதான மாநில மக்களின் கோபத்தையே இது வெளிபடுத்துவதாக கூறினார்.
தனது வாழ்நாளில் இதுபோல பிரமாண்ட பேரணியை கண்டதில்லை என்ற அமித் ஷா, பிரதமர் மோடி மீது மேற்கு வங்க மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை காட்டுவதாக கூறினார்.
மேற்குவங்க மக்கள், மாநிலத்தில் மாற்றத்தை விரும்புவதாக கூறிய அவர், மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடிக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் எனவும், அப்படி தந்தால் மேற்குவங்கத்தை 5 ஆண்டுகளில் தங்க வங்கமாக (Sonar Bangla) மாற்றி கட்டுவோம் எனவும் தெரிவித்தார்.
Comments