”இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும்”- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, உள்துறை இணையமைச்சர்கள் அஸ்வினி குமார் சவுபே மற்றும் நித்தியானந்த் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ஹர்ஷவர்தன், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பெருந்தொற்றின் பாதிப்பு ஒரு கோடியைக் கடந்துள்ள நிலையில், பாதிப்பின் வேகம் 2 விழுக்காடாகவும், இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைந்த அளவாக ஒன்று புள்ளி 45 விழுக்காடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திருவிழாக்கள் இருந்த போதும், விரிவான சோதனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாகவும் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி ஆயோக் உறுப்பினர் - வி.கே. பால் பேசும்போது கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு 12 நாடுகள் இந்தியாவை கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
Comments