தருமபுரி : கருப்பு வண்ணத்தில் விளைந்த அரிசிகளின் ராஜா... இளைஞருக்கு கிடைத்த வெற்றி!

0 10799

மண்ணை பொன்னுக்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் , ராசாயனங்கள் என்ற பெயரில் நாம் நம் மண்ணை பாழாக்கி வருகிறோம். உழவு மண்ணில் ராசாயனங்களை கலந்து பயிரிடும்போது, மண் வளம் பாழாகிறது. ஆனால் பாழாகுவது மண் மட்டுமல்ல மனிதனின் உடல் நிலையும் தான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இந்த தவற்றை உணர்ந்து பலர் இன்று பாரம்பரிய விவசாய முறைக்கு திரும்பி வருகின்றனர். அதில் ஒருவர் தான் தர்மபுரியை சேர்ந்த இளம் விஞ்ஞானி செந்தில் குமார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இராஜாகொல்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் நோக்கத்தில் இயற்கை முறை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் உடல்நிலை மட்டும் அல்லாமல் மண் வளமும் பாதிக்கப்படுகின்றன. ரசாயனம் கலந்த உணவை உட்கொள்வதால் மனிதனின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு சர்க்கரைநோய் மற்றும் புற்றுநோய் எளிதாக வருகிறது. இதனால் பாரம்பரிய இயற்கை முறை விவசாயத்தை  செந்தில்குமார் தேர்ந்தெடுத்தார்.

இவர் பாரம்பரிய நெல் ரகமான கருப்புகவுனியை நெற்களஞ்சியமான தஞ்சாவூரிலிருந்து வாங்கினார். அதனை சோதனையின் அடிப்படையில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்தார். இப்போது, செந்தில் சாகுபடி செய்துள்ள கருப்பு கவுனி நெல் தற்பொழுது சுமார் 5.5 அடி உயரத்தில் வளர்ந்து நிற்கின்றன. 140 முதல் 160 நாட்கள் வரை வளரக்கூடிய இந்தப் நெற்பயிரில் மருத்துவ குணநல மிக்க வேதிப்பொருட்கள் ஏராளம் இருக்கின்றன. இந்த நெல்லில் உள்ள வேதிப்பொருட்களான ஆல்பா-அமைலேஸ் மற்றும் ஆல்பா-குளுக்கோசிடேஸ் சர்க்கரை நோயினை கட்டுப்படுத்த உதவுகின்றது.

மேலும் இந்த அரிசியில் அதிகப்படியான நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற மனிதனுக்கு நன்மை பயக்கும் 'ஏராளமான வேதிப் பொருட்கள் நிறைந்துள்ளன. இதன் காரணத்தாலே இது 'அரிசிகளின் ராஜா ' என்று அழைக்கப்படுகின்றது.

கருப்புகவுனி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதனால், கருப்புகவுனியை சர்வரோக நிவாரணி என்றே கருதுகின்றனர். இவ்வகையான பாரம்பரிய நெல் வகைகளை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கை முறையில் பயிரிட்டு உணவாக உட்கொள்ளும்போது மனிதர்கள் ஆரோக்கியமான உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்கிறார் செந்தில் குமார்.

நூற்றில் பாதி விளை நிலங்கள், விலை நிலங்கள் ஆகி கொண்டிருக்கும் இன்றைய காலசூழலில், இளம் விஞ்ஞானி செந்தில் குமார் போன்றோரின் முயற்சி பாராட்டுதலுக்குரியதே.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments