மழையால் பயிர்கள் பாதிப்பு வேதனையடைந்துள்ள விவசாயிகள்
கடலூர் மாவட்டத்தில் தொடர்மழையால் தண்ணீர் தேங்கியதால் பூஞ்செடிகள், காய்கறிச் செடிகள், வேர் அழுகிப் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
டலூர் மாவட்டம் மதகளிர்மாணிக்கம், எசனூர், கொக்கரசன் பேட்டை, சித்தமல்லி, வானமாதேவி உள்ளிட்ட ஊர்களில் 350 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் சம்பங்கி, ரோஜா, மல்லிகை ஆகிய பூஞ்செடிகளைப் பயிரிட்டுள்ளனர்.
இதேபோல் கத்தரி, வெண்டை, மிளகாய் ஆகிய காய்கறி வகைகளையும், வாழை, சப்போட்டா, கொய்யா ஆகிய பழப்பயிர்களையும் பயிரிட்டுள்ளனர்.
ஆடி, ஆவணி மாதங்களில் பூஞ்செடிகள் நன்கு வளர்ந்து அதிகமாகப் பூக்கள் பூத்தபோது கொரோனா சூழலில் பூக்களைச் சந்தைப்படுத்த முடியாமல் போனது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பூக்கள் நல்ல விலைக்கு விற்றுவந்த நிலையில், நிவர், புரெவிப் புயல்களின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து பூந்தோட்டங்களில் நீர்தேங்கியது.
இதனால் பூஞ்செடிகளின் வேர்கள் அழுகி, இலைகள் உதிர்ந்து பூக்கள் பூப்பது குறைந்துவிட்டது.
சந்தையில் பூக்களுக்குத் தேவையும் விலையும் அதிகமுள்ள காலத்தில் கனமழையால் செடிகள் அழுகி முதலுக்கே மோசம் வந்துவிட்டதாக மதகளிர் மாணிக்கத்தைச் சேர்ந்த விவசாயி வெற்றிவேல் தெரிவித்தார்.
மழை வெள்ளத்தால் நெற்பயிர் சேதமடைந்ததைக் கணக்கெடுக்கும் அரசு அதிகாரிகள், தோட்டக்கலைப் பயிர்களைக் கணக்கெடுப்பது இல்லை என்றும், தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீடும் இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மணங்கமழும் அழகிய மலர்களையும், சுவையான காய்கறிகளையும் விளைவித்து மக்களுக்குத் தரும் விவசாயிகளின் வாழ்க்கை கனமழையால் வாடிப்போன நிலையில் அதனை சரி செய்ய உரியவர்கள் முன்வர வேண்டும்.
Comments