மறைந்தும் மக்கள் சேவையாற்றும் ராயபுரம் 5 ரூபாய் டாக்டர்!

0 3672

ராயபுரத்தில் 5 ரூபாய் கட்டணத்தில் மக்கள் சேவையாற்றிய மருத்துவர் ஜெயச்சந்திரனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் வீட்டுக்கு சென்று பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகேயுள்ள கொடைப்பட்டினம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர், சிறு வயதாக இருக்கும் போது, கொடைப்பட்டின மக்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பலர் இறந்து போயிருக்கிறார்கள். இதை கண்டு வைராக்கியமாக மருத்துவம் படிக்க சேர்ந்த ஜெயச்சந்திரன் கடந்த 1971-ம் ஆண்டில்  சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் சிறிய கிளினிக்கை ஆரம்பித்தார். சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம 5 ரூபாய்க்கு மேல் வாங்கமாட்டார்.  அடித்தட்டு மக்களிடத்தில் சாகும் வரை  5 ரூபாய்தான் கட்டணமாக பெற்று வந்தார்.  வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்தால் கூட அவற்றை மருந்து மாத்திரைகளாக வாங்கி வைத்துக் கொள்வார். மருத்து, மாத்திரை வாங்க வசதியில்லாத ஏழை மக்களுக்கு அவற்றை இலவசமாகவே கொடுப்பார். இப்படி, மக்களிடத்தில் அன்பும் கனிவும் காட்டிய மருத்துவர் ஜெயச்சந்திரன் வட சென்னை மக்களின் அன்புக்குரிய மனிதராக வலம் வந்தார். 

மக்கள் சேவைக்கான தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் கடந்த 2018 - ஆம் ஆண்டில் தன் 71 வயதில் இறந்தார். அப்போது, வட சென்னையே கண்ணீரில் மூழ்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஜெயச்சந்திரனின் 2- ம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி  காலை முதலே ஜெயச்சந்திரன் வீட்டு முன் குவிந்த பொதுமக்கள் அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் . மருத்துவர் ஜெயச்சந்தினின், நற்குணங்களை கூறி சிலர் தளுதளுத்தனர்.

மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த வட சென்னை மக்கள் கூட்டமைப்பினர்,  ராயபுரம் சிமின்ட்ரி சாலை அல்லது கல் மண்டபம் சாலை ஏதாவது ஒன்றுக்கு மருத்துவர் ஜெயச்சந்திரனின் பெயர் சூட்ட வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஜெயச்சந்திரனின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் வீட்டில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் ஜெயச்சந்திரனின் மனைவியும் டாக்டருமான வேணி மற்றும் மகள், மகன் உள்ளிட்ட ஏராளமான டாக்டர்கள்  கலந்து கொண்டு ஏழை நோயாளிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமான வழங்கப்பட்டன. 

தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையாற்றிய மருத்துவருக்கு அவரின் நினைவுதினத்தை இப்படி அனுஷ்டிப்பதுதானே சாலச்சிறந்தது. அந்த வகையில்,மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைந்த பிறகும் மக்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments