அடிலெய்டு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

0 6377
அடிலெய்டு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

அடிலெய்டில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் 2வது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்டு இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 191 ரன்களும் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தனர்.

இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. முகமது சமி ஒரு ரன் எடுத்த நிலையில் காயமடைந்து வெளியேறியதால் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 36 ரன்களுடன் முடிந்தது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹேசில்உட் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்திய அணி வீரர்களில் மூவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மற்றவர்களும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ்களிலேயே இந்திய அணி எடுத்த மிகக் குறைவான எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன் 1974ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் எடுத்தது இந்திய அணியின் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

90 ரன்கள் என்கிற எளிதான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ஜோ பர்ண்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மிகக் குறைந்த ரன்களில் இந்திய அணி சுருண்டதும், ஆஸ்திரேலிய அணி மூன்றே நாட்களில் போட்டியை வென்றதும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments