544 டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான இன்னங்ஸ் இதுதான் ... 11 வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட் !
இதுவரை 544 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி முதன்முறையாக குறைவான ரன்களை எடுத்துள்ளது. ஒரே இன்னிங்சில் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி சாதனை புரிந்துள்ளனர்.
இந்திய அணி கடந்த 1932 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 544 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி 42 ரன்கள் எடுத்ததுதான் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட குறைவான ரன் ஆகும். ஆனால், அதையும் விட குறைவாக ஒரே இன்னிங்ஸில் குறைவான ரன் எடுக்க முடியுமென்று ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வீரர்கள் நிரூபித்துள்ளனர். அடிலெய்டில் நடந்த முதல் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களையாவது எட்டும் என்று எதிர்பார்ப்பட்டது- ஆனால், இந்திய வீரர்களின் விக்கெட்டுகளே சீட்டுக் கட்டுகள் போல சரிய தொடங்கின. தொடக்க ஆடடக்காரர்கள் பிரித்திவி ஷா 4 ரன்களிலும் மாயங்க் அகர்வால் 9 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த பும்ரா, புஜாரா, கோலி , ரஹானே யாரும் நிலைத்து ஆடவில்லை. வருவதும் போவதுமாக இருந்தனர். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கம்மின்ஸ வீசிய பந்தில் முகமது ஷமியின் கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 36 ரன்கள் முடிவுக்கு வந்தது. இந்திய அணியில் எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. இதற்கு முன்னர், 1947 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் லாலால அமர்நாத் தலைமையில் ஆடிய இந்திய அணி 58 ரன்கள் எடுத்தே குறைந்த பட்ச ரன்களாக இருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 65 ஆண்டுகளில் எந்த அணியும் இவ்வளவு குறைவான ரன்களை அடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 26- ஆம் தேதி மெல்பர்ன் நகரில் நடைபெறவுள்ளது. எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களிலும் கேப்டன் விராட் கோலி ஆடமாட்டார். கோலியின் மனைவி அனுஷ்கா நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால், தாய் நாடு திரும்பவுள்ளார். விராட் கோலி இல்லாத நிலையில், இந்திய அணி என்ன ஆகப் போகிறதோ என்று தெரியவில்லை.
Comments