மலைக்க வைத்த கிராம மக்களின் மலை பாம்பு நேசம்..! மேளதாளத்துடன் இறுதி அஞ்சலி
கிருஷ்ணகிரியில் சாலையை கடக்கும் போது லாரி சக்கரத்தில் சிக்கி பலியான மலைபாம்புக்கு கிராமமக்கள் மேளதாளத்துடன் மாலை அணிவித்து மரணித்த மனிதர்களுக்கு இணையாக இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள நாடார் கொட்டாய் என்ற பகுதியில் இன்று காலை சுமார் 12 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.
அப்போது அந்த வழியே வந்த லாரியின் சக்கரம் , மலை பாம்பின் மீது ஏரியதால் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தது. இந்த சம்பவத்தை அவ்வழியே சென்றவர்கள் வேடிக்கையாக பார்த்து சென்றனர். சிலர் செத்த பாம்புடன் செல்பி எடுத்தனர்
இன்னும் சிலரோ அந்த மலைப்பாம்புக்கு உயிர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அச்சத்துடன் கடந்து சென்றனர்
மலை பாம்பு ஒன்று உயிரிழந்து கிடக்கும் தகவல் அறிந்த நாடார் கொட்டாய் கிராம மக்கள், உயிரிழந்த மனிதருக்கு செய்யும் மரியாதையை போல இறுதி சடங்கு செய்ய முடிவெடுத்தனர். மேள தாளம் முழங்க கையில் மாலையுடன் வந்து மலைபாம்புக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
மலைபாம்பு மீது பன்னீர் தெளித்து மலர்கள் தூவி அதற்காக புது வெள்ளை துணியில் சுற்றி மலைப்பாம்பை மாண்புடன் எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்தனர்.
விபத்தில் உயிரிழந்த மலை பாம்பிற்கு முதன்முறையாக மனிதர்களுக்கு இணையான மரியாதையுடனுடன், மாறாத நேசத்துடனும் கிராமத்து மக்கள் செய்த இறுதிச்சடங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாம்புகள் விவசாயிகளின் தோழன், பயிர்களையும் கிழங்குகளையும் வேட்டையாடும் பெருத்த எலிகளை சம்பளம் இல்லா காவல் காரனாக இருந்து பாம்புகள் பதம் பார்த்து விடுவதால் விளை பொருட்கள் வீணாகாமல் வீடு வந்து சேர்கிறது என்று சுட்டிக்காட்டும் வனவிலங்கு ஆர்வலர்கள், இந்த பூமி மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல, மனிதன் வாழ செடி கொடிகளும், புழு, பூச்சிகளும், விலங்குகளும், பறவைகளும் அவசியம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
Comments