இனி வில்லனாக நடிக்கப் போவதில்லை.. விருப்பம் தெரிவித்த சோனு சூட்
கொரோனா காலத்தில் தான் செய்த உதவிகள் தன்னை முழுமையாக மாற்றிவிட்டதால், இனி வில்லனாக நடிக்க போவதில்லை என்று நடிகர் சோனுசூட் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்து வரும் உதவிகளால் மக்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்துள்ளார். உதவி தேவைப்படுவோர்க்கு தகுந்த நேரத்தில் கைகொடுத்து அவர்களின் துன்பத்தை தன் தோளில் தாங்கி நிற்கிறார். யாருமே உதவியற்று நிற்க கூடாது என்று பறந்து பறந்து உதவி செய்து வருகிறார் சோனு சூட்.
வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தார். அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாதவர்களுக்கு பண உதவி செய்தார். ஆன்லைனில் படிக்க வசதியில்லாத மலைக்கிராம மாணவர்களுக்கு மொபைல் டவர் அமைத்து கொடுத்தார். தேவைப்படுவோர்க்கு உதவி செய்வதற்காக தனது 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அடமானம் வைத்தார். இன்றும் கூட பென்ஸ் கார் மோதி உணவு டெலிவரி விற்பனை ஏஜெண்ட்டாக பணியாற்றிய இளைஞர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் தான் செய்வதாக நடிகர் சோனு சூட் உறுதியளித்துள்ளார்.
இப்படி தேடி தேடி உதவி செய்து வரும் சோனுசூட் மக்கள் அனைவரின் இதயத்தையும் கவர்ந்துள்ளார். இவரின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக பிரபல பத்திரிக்கை ஒன்று அவரை ’ஆசியாவின் சிறந்த சினிமா ஆளுமை’ என கவுரவித்தது. சோனுசூட்டின் மனித நேய மிக்க சேவையை பாராட்டி, ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக நடிகர் சோனுசூட் செய்து வரும் மனிதநேயமிக்க செயல்கள், அவர் மீதான ’வில்லன்’ இமேஜை மாற்றியுள்ளது. மக்களும் அவரை தங்கள் நிஜ ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் மத்தியில் அவரது வில்லன் இமேஜ் மாறிவிட்டதால் இயக்குனர்களும் அவருக்கு வில்லன் கதாப்பாத்திரம் கொடுக்க தயங்கி வருகிறார்களாம். கொரோனா லாக்டவுனுக்கு முன் அவர் நடித்த தெலுங்குப் படம் ’அல்லுடு அதுர்ஷ்’. தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்த அவரது கதாப்பாத்திரத்தை முற்றிலும் மாற்றிவிட்டார்களாம்.
இது குறித்து நடிகர் சோனுசூட் கூறுகையில், ”இந்த ஒரு வருடத்தில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது. எனவே இனி நான் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்கப் போவதில்லை. பாசிட்டிவ்வான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்” என தெரிவித்துள்ளார். பாலிவுட் காமெடி நடிகர் அதுல் கத்ரி, இனிமேல் சோனுசூட் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்க மாட்டார் எனவும், அவ்வாறு நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ”இது புதிய இன்னிங்ஸை ஆட வேண்டிய நேரம்” என்று சோனுசூட் பதில் அளித்துள்ளார்.
சோனுசூட்டின் இந்த பதிலால், திரையில் இதுவரை அவரை வில்லனாக மட்டுமே பார்த்து ரசித்த அவரது ரசிகர்கள் இனி ஹீரோவாக பார்க்க போகிறோம் என்று கொண்டாடி வருகின்றனர்.
Comments