டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறும் வரை தமிழகத்திலும் போராட்டம்.... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வெற்றி பெறும் வரை தமிழகத்திலும் போராட்டம் தொடரும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கொங்கு ஈஸ்வரன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப் பெறு என்ற வாசகம் அடங்கிய பச்சை நிற முகக் கவசத்தை தலைவர்களும், தொண்டர்களும் அணிந்திருந்தனர்.
நிறைவாக பேசிய ஸ்டாலின், இந்த போராட்டம் நடத்தியதற்காக எந்த வழக்கு போட்டாலும் எதிர்கொள்ள தயார் என்றார். விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து பேசினர். டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக உண்ணாவிரதத்தில் தலைவர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இறுதியில் பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முடித்து வைத்தார்.
இதனிடையே, தடையை மீறி, உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, மதிமுகவின் வைகோ, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, ஜஜேகே ரவி பச்சமுத்து, விசிக திருமாவளவன், தி.க கீ.வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments