வேளாண் சட்டங்கள் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமாக இருக்கும்... விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் தோமர் 8 பக்க திறந்த மடல்

0 1427
வேளாண் சட்டங்கள் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமாக இருக்கும்... விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் தோமர் 8 பக்க திறந்த மடல்

த்தியப் பிரதேசத்தில் வேளாண் சட்டங்களின் பயன் பற்றி விவசாயிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாடுகிறார். வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுதிய திறந்த மடலை அவசியம் படிக்குமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி அருகே 23 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள போதிலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால்தான் பேச்சு நடத்துவோம் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுதியுள்ள திறந்த மடலில், புதிய சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் பயன் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சில மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அடிப்படை ஆதார விலை இருக்காது என அரசியல் காரணங்களுக்காக பொய்யுரை பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். வேளாண்துறையில் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமிடும் விதத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த சட்டங்கள், கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் விவசாயிகளை செயல்பட வைக்கும் என தோமர் உறுதி அளித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், விவசாயிகளிடம் திறந்த மனத்துடன் உரையாடுவதற்காக தோமர் திறந்த மடல் எழுதி முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த திறந்த மடலின் செய்தியை நாட்டில் அனைவரிடமும் மக்கள் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மத்தியப் பிரதேச மாநில விவசாயிகளிடம் காணொலி மூலம் பிரதமர் இன்று உரை நிகழ்த்த உள்ளார். மத்திய அமைச்சர்கள் நேற்று நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் மோடியின் இன்றைய பேச்சில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments