மதுரை : லஞ்ச வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை ; மனைவியைக் கொன்று முன்னாள் காவல் ஆய்வாளர் தற்கொலை
மதுரையில் லஞ்ச வழக்கில் தண்டனைபெற்ற லஞ்ச ஒழிப்புதுறை முன்னாள் காவல்ஆய்வாளர் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனிமாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்த பெருமாள்பாண்டி என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010- ஆம் ஆண்டு லஞ்ச வழக்கு ஒன்றிலிருந்து அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக பெருமாள் பாண்டி மீது லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்குபதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில் பெருமாள்பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜாமீனில் ஜாமீனில் பெருமாள்பாண்டி வெளி வந்திருந்தார். மதுரை தத்தநேரி பகுதியில் உள்ள வீட்டில் தன் மனைவி உமா மீனாட்சியுடன் இருந்தார். இந்த நிலையில், பெருமாள்பாண்டிக்கும் அவரின் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பெருமாள்பாண்டி உமா மீனாட்சியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த உமா மீனாட்சி இறந்து போனார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெருமாள் பாண்டி தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் செல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற கரிமேடு போலீஸார் இருவர் உடலையும் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments