மதம், மொழி, மாநிலங்களை தாண்டி நிகழ்ந்த திருமணம்... கேரளாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ்ப் பெண்!
கேரளாவில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. கவிதா என்ற மணமகளுக்கு தந்தை ஸ்தானத்திலிருந்து ரசாக் என்பவர் முன்னின்று அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த இடத்தில், ரசாக்குக்கு கவிதா என்ற பெயரில் மகளா என்கிற கேள்வி எழுகிறது அல்லவா... இதற்கு விடை கிடைக்கவேண்டுமென்றால் 14 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள த்ருப்ரயார் நகரை சேர்ந்தவர் ரசாக். விமானப்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு த்ருப்ரையாரில் சாலையில் அழுக்கு உடைகளுடன் திரிந்த கவிதா என்ற 8 வயது சிறுமியை ரசாக் மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தார். ஏற்கெனவே ரசாக்குக்கு 3 மகள்கள் இருந்த நிலையில், கவிதாவையும் நான்காவது மகளாக ஏற்றுக் கொண்டு ரசாக் மற்றும் அவரின் மனைவி நுர்ஜகான் வளர்க்கத் தொடங்கினர்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் பிரபாகரன் என்ற பெயரிலேயே விஜயகாந்த் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் வளர்வார். அதே போலவே, ரசாக் வீட்டில் கவிதாவும் கவிதாவாகவே வளர்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கவிதாவின் பெற்றோரையும் ரசாக் கண்டுபிடித்து விட்டார். கவிதாவின் பெற்றோர் சேலத்தில் வசித்து வந்தனர். தொடர்ந்து, கவிதாவின் பெற்றோரும் ஆண்டுக்கு ஒரு முறை த்ருப்ரையார் சென்று மகைளை பார்த்து வருவார்கள். தன் சொந்த ஊரான சேலத்துக்கும் கவிதா வந்து பெற்றோரை பார்த்து செல்வதும் உண்டு.ஆனாலும், கவிதாவை ரசாக்கின் குடும்பத்திடமிருந்து பிரிக்க அவரின் பயலாஜிக்கல் பெற்றோர் விரும்பில்லை. தன் மகள் ரசாக் வீட்டிலேயே நல்லபடியாக வாழட்டும் என்று முடிவு செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வளர்ப்பு மகளான கவிதாவுக்கு ரசாக் வரன் பார்க்க தொடங்கினார். நட்டிகா என்ற பகுதியை சேர்ந்த போட்டோ கிராபர் ஸ்ரீஜித்தை தன் மகள் கவிதாவுக்கு நிச்சயமும் செய்தார். ஸ்ரீஜித் அலங்கார மீன் பண்ணையும் நடத்தி வந்தார். கடந்த டிசம்பர் 6 -ஆம் தேதி ரசாக்கின் வீட்டில் வைத்தே னமுற்றிலும் இந்து முறைப்படி கவிதா - ஸ்ரீஜித் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்தில் கவிதாவின் பயலாஜிக்கல் பெற்றோர், இரு சகோதரிகளும் மன மகிழ்வுடன் திருமணத்தில் பங்கேற்றனர்.
கவிதாவுக்கு தன் வீட்டை ஒட்டியுள்ள 4 சென்ட் நிலத்தை ராசக் திருமணப் பரிசாக எழுதி வைத்தார். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ரசாக்கின் மகள்கள் 12 பவுன் நகைகளை தங்கள் சகோதரிக்கு பரிசாக வழங்கி வாழ்த்தினர். மதம், மொழி, மாநிலங்களை தாண்டி நபெற்ற இந்த திருமணம்தான் தற்போது கேரளத்தின் ஹாட் டாபிக். கேரளாவில் திருமணம் நடைபெற்று 10 நாள்கள் ஆகி விட்டாலும், தற்போதும் கவிதாவின் திருமணப் புகைப்படங்களை இணையத்தில் பலரும் பரப்பி வருகின்றனர்.
Comments