போலி கணக்கு எழுதியவருக்கு 33 ஆண்டுகள் சிறை ... நடக்க முடியாமல் நடந்து சிறை சென்ற முதியவர்!
காஞ்சியில் போலி கணக்கு எழுதி மோசடி செய்த முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தள்ளாத வயதில் கம்பு ஊன்றியபடி அவர் சிறைக்கு நடந்து சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் விஜி ராவ் நகரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு (வயது 65) . இவர் . காஞ்சிபுரத்தில் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பதவியில் இருந்தபோது போலி கணக்கு எழுதி ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வாரியத்தின் துணைப்பதிவாளர் கடந்த 2006 ஆம் ஆண்டு புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன கண்ணுவை கைது செய்திருந்தனர்.இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்ன கண்ணுவை 2018 ஆம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
ஆனால், அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கயல்விழி சின்னக் கண்ணு மீது நம்பிக்கை மோசடி செய்தது, பொய் கணக்கு எழுதி போலியான ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட குற்றங்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே சின்ன கண்ணுக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ,ரூ. 48 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார். தொடர்ந்து , கம்பு ஊன்றியபடி நீதிமன்ற வளாகத்தை விட்டு ‘சின்னக்கண்ணு வந்தது பலருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. கடந்த 2006ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 65 வயதான சின்னக்கண்ணு , காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இனிமேல் , அவர் தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் என்பதால் அவரின் உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
Comments