அந்த ‘மான்’ பாண்டியன் தெரியுமா ? மாதம் ரூ.50 லட்சம் வசூல்
சுற்றுச் சூழல் துறையில் கண்காணிப்பாளராக இருந்துகொண்டு, இயக்குனர்களையே பணிசெய்ய விடாமல் தடுக்கும் அளவுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன், கடந்த 25 நாட்களில் மட்டும் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மக்களுக்கு கேன்சரை விற்கும் நச்சு ஆலைகளுக்கு உரிமம் வழங்கிய வசூல் சக்ரவர்த்தியின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தமிழகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியங்களுக்கு மூலகாரணமாக இருந்து கொண்டு கோடிகளில் லஞ்சப் பணத்தில் கொழித்த குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளரான அந்தமான் பாண்டியன் இவர் தான்..!
பாண்டியனின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 14-ம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர். அவரிடமிருந்து கட்டுகட்டாக ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் பணமும், மூன்று கிலோ தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
முறைகேட்டிற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை அந்தமானுக்கு உல்லாசப் பயணத்துக்கு அழைத்துச் செல்லும் புரோக்கர் போல செயல்பட்டதால், அவரது நட்பு வட்டத்தில் அந்தமான் பாண்டியன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். வாட்ஸ் அப் காலில் மட்டுமே ஆற்றில் மாசு கலப்பதற்கு டீல் பேசும் வழக்கம் கொண்ட பாண்டியன், தான் சொன்ன இடத்தில் வழங்கப்பட்ட பணத்தை, பணிமுடிந்து செல்லும்போது மொபட்டில் தனி ஆளாகச் சென்று தவறாமல் வசூலித்துச் செல்வது வழக்கம் என்றும், அந்த வகையில் கடந்த 25 நாட்களில் மட்டும் அவர் வசூலித்த லஞ்சப்பணம் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்கின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
குறிப்பாக கடலோர மற்றும் வனத்துறைப் பகுதிகளில் தொழிற்சாலை மற்றும் பெரிய கட்டுமானங்களுக்கு கட்டுக்கட்டாக பணத்தை பெற்றுக் கொண்டு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை வழங்கியதில், அந்தமான் பாண்டியன் மூளையாகச் செயல்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வசூல் சக்கரவர்த்தி வாங்கி குவித்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஜெயந்த் முரளிக்கு சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து பாண்டியன் மீது புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
1996-ஆம் ஆண்டு மத்திய அரசு, வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள கடலோரப் பகுதி கடலோர மேலாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அந்த பகுதியில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், 2017-ம் ஆண்டு இந்த கடலோர மேலாண்மை மண்டலத் திட்டத்தின் வரைப்படத்தை மத்திய அரசு மாற்றியது போன்று முறைக்கேடாக மாற்றியமைக்கப்பட்டு அதன் பரப்பளவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பின்னர் தெரிய வந்திருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
2017 - ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வரைபடத்தை முறைகேடாக மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த முறைகேட்டில் சுற்றுச் சூழல்துறை அதிகாரி பாண்டியனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள சூழலியல் ஆர்வலர்கள், இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றுப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், எண்ணூரில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் முறைகேடாக தொழிற்சாலைகள் அமைப்பதில் அந்தமான் பாண்டியனுடன் அப்போதிருந்த சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மாசடைந்து இருப்பதாக உயர்நீதி மன்ற மதுரைக்கிளை கண்டிக்கும் அளவிற்கு ஆட்டம் போட்ட அந்தமான் பாண்டியனுக்கு பணி நீட்டிப்புக் கொடுத்து அவரது வசூலுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments