வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்... வாபஸ் பெற முடியாது - விவசாய சங்கங்கள்

0 2077

விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்க குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. 

மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 22 வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த பிரச்சனை விரைவில் தேசிய பிரச்சனையாக மாறும் என்பதால், விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க, தேசிய அளவில் குழு அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரும் மனுக்கள் மீது இன்றைக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசு மற்றும் டெல்லி, அரியானா மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் விடுத்துள்ள அறிவிப்பில், வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments