மார்கழி மாத பிறப்பையொட்டி கோயில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜை
மார்கழி மாத பிறப்பையொட்டி, தமிழகத்தில் உள்ள கோயில்களில் இன்று அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் என்று நம்பப்படுவதால், ஆண்டுதோறும் அந்த மாதங்களில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, வீடுகளிலும், கோயில்களிலும் பக்தி பாடல்களை பாடி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் இன்று பிறந்ததையடுத்து, கோயில்களிலும், வீடுகளிலும் அதிகாலையிலேயே இன்று சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ராமநாதபுரத்தில் அதிகாலையிலேயே எழுந்த பக்தர்கள், குளிர்ந்த நீரில் நீராடி கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் பஜனை பாடியபடி அரண்மனை பெரிய கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஷ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி அக்கோயிலில் காலையிலேயே திரண்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Comments