தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழைப்பொழிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழைப்பொழிவு காணப்பட்டது. அண்மையில் பெய்த மழையால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற முயன்று கொண்டிருக்கும் விவசாயிகள் இதனால் கலக்கமடைந்துள்ளனர்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், மீண்டும் அதிகாலை முதல் லேசான மழை விட்டுவிட்டு பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல்,மன்னார்குடி ,வலங்கைமான் உட்பட பல பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு தொடங்கி சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை காணப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் , தலைஞாயிறு, கள்ளிமேடு, செம்போடை, ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், செட்டிபுலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் உப்பளம், கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர், திருபுவனை, மதகடிபட்டு, ஊசுடு பகுதிகளில் காலை தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
Comments