எண்ணி ஏழே செகண்டுல வண்டி ஆப் ஆயிடும்..! விபத்தை தடுக்க புது வழி

0 10538
எண்ணி ஏழே செகண்டுல வண்டி ஆப் ஆயிடும்..! விபத்தை தடுக்க புது வழி

சாலைப் பயணத்தில் ஓட்டுனர்கள் தூங்குவதால் நிகழும் விபத்துக்களைத் தடுக்க பிரத்யேகக் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலி எழுப்பி, அதிரவைத்து எதிரில் வரும் வாகனங்களில் மோதுவதைத் தவிர்க்கும் நவீன தொழில் நுட்பம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

காலியான சாலையில் இரவு நேரப் பயணம்... ரிஸ்க் என்றாலும், குறுக்கீடின்றி விரைவாக சாலையில் வாகனத்தை இயக்க முடியும் என்பதால் தொலைதூரப் பேருந்துகள் தொடங்கி, சரக்கு லாரிகள், வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள் இரவுப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இரவு நேரம் வாகனத்தை ஓட்டி செல்லும் வாகன ஓட்டிகள் தங்களின் கவனக்குறைவாலும், உடல் அசதியால் கண் அயர்ந்து தூங்கி விடுவதாலும் சில நொடிகளில் விபத்து நிகழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

இதுபோன்ற எதிர்பாராத நேரத்தில் தங்களையும், பல கனவுகளுடன் உடன் பயணிப்போரின் உயிர்களையும் காப்பதற்காக ஏதுவாக கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் இருந்து தப்பிப்பது மட்டுமல்லாமல், உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாமல் இருக்க, சென்னையை சேர்ந்த மெஜஸ்டிக் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நவீனக் கருவியை கண்டு பிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, தூக்கம் வரும் நிலையில் உள்ள ஓட்டுனர் இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சாருடன் கூடிய கண்ணாடியை அணிந்து கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும், 7 நொடிக்கு அதிகமாக கண்களை மூடினால் ஓட்டுநரின் முன் பக்கம் பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார் கருவி மூலம், மைக்ரோ கண்ட்ரோலர் சர்க்யூட்டுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும்.

அந்த நேரத்தில் மைக்ரோ கண்ட்ரோலர் சர்க்யூட் ரிலே மூலம் ஆட்டோ மெட்டிக் ஸ்விட்சுக்கு பவரை சப்ளை செய்யும். அதன் மூலம் ஓட்டுனரின் தூக்கத்தை கலைக்கும் வண்ணம் பீப் சத்தமானது 7 வினாடிகள் வரை ஒலிக்கும்.

அதையும் தாண்டி ஓட்டுநர் கவனம் செலுத்தவில்லை என்றால், அடுத்த 5 வினாடிகளில் அவரது இருக்கை வைபரேஷன் ஆகும்.

மூன்றாம் கட்டமாக சொலினாய்டு வால்வுக்கு காற்று சப்ளை ஆனதும் விபத்தை எதிர் நோக்கி இருக்கும் வாகனத்தின் பிரேக் தானாக பிடிக்க தொடங்கும் அதே சமயத்தில் வாகனத்தின் முன் பக்கம் பொருத்தப்பட்டு இருக்கும் பம்பர் தானாக நீண்டு விபத்தை தவிர்ப்பது மட்டுமல்லாமல் வாகனத்தை நிறுத்தி விடும் என்கின்றனர் இந்த கருவியை கண்டுபிடித்தவர்கள்.

இந்த கருவியை, கார்கள் முதல் கனரக வாகனம் வரை அந்தந்த பிரேக் சிஸ்டத்துக்கு தகுந்தாற் போல் வாகனத்தில் பொருத்திக் கொண்டால், விபத்தில் இருந்து தம்மையும், தன்னை நம்பி பயணிப்பவர்களின் விலைமதிப்பில்லா உயிரை காக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் முகம்மது அப்பாஸ்.

வரும் நாட்களில் சாலை விபத்துக்களைத் தவிர்க்க, வாகனங்களில் இந்த கருவியைப் பொருத்த மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, முழு பரிசோதனைக்கு பின்னரே ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், உரிமம் கிடைத்தால் இரவு நேர தூக்கத்தால் நிகழும் ஏராளமான சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர்ச் சேதத்தை தவிர்க்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments