இந்தியா -பாக் போரின் 50வது ஆண்டை ஒட்டி நிகழ்ச்சிகள்... வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த போர் நினைவுச் சின்னம்

0 1810

இந்தியா- பாகிஸ்தான் போரின் வெற்றியின் பொன்விழா ஆண்டை ஒட்டி  மறைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1971ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி, இந்திய ராணுவம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. இது வங்கதேசம் என்ற தனிதேசம் உருவாக வழிவகுத்தது.

இந்தியா - பாகிஸ்தான் போரின் பொன்விழா நாடு முழுவதும் இன்று விஜய் திவஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்துகிறார்.
அணையாத ஜோதியையும் அவர் ஏற்றி வைக்க உள்ளார்.

நான்கு ஜோதிகள் ஏற்றப்பட்டு, 1971ம் ஆண்டு போரில் பங்கேற்ற வீரர்களின் கிராமங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு இந்த ஜோதிகள் கொண்டு செல்லப்படும். இந்தியா பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தும் வகையில் கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் திரையிடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன.

1971ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 11 மணி நேரத்தில் 180 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். ராஜஸ்தானில் உள்ள பிகானிர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 930 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். கையில் விளக்கேந்தியபடி ஒவ்வொருவரும் சுமார் 400 முதல் 500 மீட்டர் தூரத்தைக் கடந்தனர்.

சர்வதேச எல்லையில் ஓடிய வீரர்கள் அனுப்காரில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் தங்கள் ஓட்டத்தை முடித்தனர். வீரர்கள் விளக்கேந்தி ஓடியதை மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜூஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நினைவு தூண், மண்டபம் ஆகியவற்றின், அனைத்து பகுதிகளும் கண்களை கவரும் விதமாக, வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments