பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா.. சுற்றுச் சூழல் அதிகாரி சிக்கிய பின்னணியில் அந்தமான் சுற்றுலா

0 12248

சென்னையில் சுற்றுச் சூழல் துறை அதிகாரியின் அலுவலகம், வீட்டில் நடந்த சோதனையில் கட்டுகட்டாக கணக்கில் வராத பணமும், பல கோடி மதிப்புடைய தங்க, வைர நகைகள் மற்றும் வாங்கி குவித்த சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளது. சோதனையில் சிக்கிய சுற்றுச் சூழல் துறை அதிகாரி, ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சிலருடன் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பின்னணியில் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகையில் இயங்கி வரும் சுற்றுசூழல் துறை அலுவலகத்தின் கண்காணிப்பாளராக பாண்டியன் பணி புரிந்து வருகிறார். பல நிறுவனங்களுக்கு சுற்று சூழல் துறையின் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கியிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் லாக்கரிலும், காரிலும் முதலில் 88 ஆயிரத்து 500 ரூபாய் சிக்கியது.

தொடர்ந்து சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள அந்த அதிகாரியின் வீட்டில் கூடுதல் டி.எஸ்.பி லாவண்யா மற்றும் டி.எஸ்.பி சங்கர சுப்பிரமணியம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். திங்கட்கிழமை மாலை தொடங்கி காலை வரை விடிய விடிய சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு கோடியே 37 லட்ச ரூபாயும், ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 10.52 காரட் வைரமும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும், அவரது குடும்பத்தினரின் பல்வேறு வங்கி கணக்கில் 75 லட்சம் ரூபாய் பணம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கியுள்ளனர்.

மேலும், ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய 18 சொத்து ஆவணங்களும், ஒரு கார், மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். வருமானத்திற்கும், வாங்கி குவித்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கும் முரண் இருப்பதால், சுற்று சூழல் துறை அதிகாரி பாண்டியன் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் துறையில் இருபது வருடங்களாக பணிபுரிந்து வரும் பாண்டியன் இந்த சோதனையில் சிக்கியதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. பாண்டியன் கடந்த சில வருடங்களில் ஈசிஆரில் இரண்டு வீடு, சொந்த ஊர் புதுக்கோட்டை திருமயத்தில் சொத்துக்கள் என வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக கடலோரப் பகுதிகளில், வனப்பகுதிகளில் நடைபெறும் கட்டுமானம், தொழிற்சாலைகளுக்கெல்லாம் அனுமதி சான்றிதழ் வழங்குவதில் பாண்டியன் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சிலர், சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் என பாண்டியனுக்கு உடந்தையாக இருந்தவர்களின் பட்டியல் நீள்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது போன்ற அதிகாரிகள் உடந்தையாக இருந்ததால் பாண்டியன் போட்ட ஆட்டம் கொஞ்சம், நஞ்சமல்ல என்கின்றனர் சுற்றுச் சூழல் துறையில் பணிபுரியும் சில ஊழியர்கள்.

பாண்டியன் தனது லஞ்ச ஊழலில் பங்கு போடும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உட்பட உயர் அதிகாரிகளுடன் சில இளம் பெண்களையும் சேர்த்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் அந்தமானுக்கு இன்பச் சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.

அந்தமானில் அதிகாரிகளுக்கு கொடுத்த விருந்து குறித்த தகவலை அறிந்த மற்றொரு ஐ.எப்.எஸ் அதிகாரி தான், லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவலை கசியவிட்டுள்ளார். அதிலிருந்து பாண்டியனை கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக இறங்கி தற்போது சோதனை நடத்தியுள்ளனர்.

கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் லஞ்ச விவகாரத்தில் தரகர் போன்று செயல்பட்டுள்ளதால், அவருக்கு சம்மன் அனுப்பி தொடர்ந்து நடைபெறவுள்ள விசாரணையில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments