'போட்டோவுக்கு முகம் காட்டி 30 வருசமாச்சு!' - மறைந்த சுப்ரமணியம் குறித்த மருத்துவர் சிவராமனின் உருக வைக்கும் பதிவு!
சமீபத்தில் கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனரும் சாந்தி அறக்கட்டளை அறங்காவலருமான சுப்ரமணியம் மறைந்தார். சுப்ரமணியத்தின் மறைவு குறித்து மருத்துவர் சிவராமன் வெளியிட்டுள்ள பதிவு உருக வைத்துள்ளது.
சிவராமனின் பதிவில் இது....
"இப்ப உங்களுக்கு நேரம் இருக்கிறதா? ஒரு நல்ல ஆன்மாவை நீங்கள் இன்றைக்கு சந்திக்க வேண்டும். கிளம்பி ரெடியாக இருங்க 15 நிமிடத்தில் வருகின்றேன்" ஒரு நாள் காலைப்பொழுதில் கோவையில் நான் இருந்த போது, நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து சொன்னார்.
எங்கள் கார் நின்ற இடம் சாந்தி கியர்ஸ் உணவகம் முன்னால். அந்த காலைவேளையில், எங்களை வரவேற்க உணவக வாசலில் நின்று கொண்டிருந்தார் அந்த முதியவர். அவர்தாம் சாந்திகியரினை, சாந்தி சமூக நிறுவனத்தை தோற்றுவித்திருந்த திரு. சுப்பிரமணியம் அவர்கள்.
என் வாழ்வில் மறக்க முடியாத, என்னை திருப்பிப்போட்ட நாள் அது. " வாங்க சிவராமன். உங்க எழுத்த நிறைய வாசிச்சிருக்கேன். வாங்க வாங்க " என வாயார அழைத்து உணவகம் உள்ளே கூட்டிச்சென்ற அவர் தன் 76 வயதிலும் சாந்தி நிறுவன யூனிபார்மிலேயே பளிச்சென இருந்தது முதல் பிரமிப்பு.
கிட்டத்தட்ட திருப்பதி உணவகம் போல அவ்வளவு பெரிய உணவகம். மிக மிக சுத்தமான இருக்கைககள். முழுமையாய் கணிணி மயமாக்கப்பட்ட அந்த உணவகத்தில் வரிசையில் ஏராளமாய் மக்கள். 3 ரூபாய்க்கும் 5ரூபாய்க்கும் பல காலை உணவுகள். சாப்பாடு வெறும் 10ரூபாய். காபியில் தேனீரில் கலந்து கொள்ள நாட்டு சர்க்கரையும் தனியாக உணவகத்தினுள் அவ்வளவு நேர்த்தியாக சுத்தமாக அடுக்கி வைக்கப்ப்ட்டிருந்தன தரமான விலை கூடிய உணவுப்பொருட்கள். துளி தரம் உணவில் குறையக் கூடாது என்கிற கொள்கை பிடிவாதம் ஒவ்வொரு விஷயத்திலும் அங்கே வழிந்தது. பல பெண்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் மிகப்பெரும் பாத்திரம் கழுவும் இயந்திரம் அருகே சென்று, " " இங்க பாத்தீங்களா? காபி டம்ளர் விளிம்பு சுத்தம் பண்றது எவ்ளோ கஷ்டம்..இந்த மிஷினை நானே நாங்களே வடிவமைத்தோம்; ஒவ்வொரு மணி நேரமும் 500-1000 டபரா சுத்தமா கழுவணும்ல" என சொல்லிவிட்டு , "வாங்க சாப்பிடலாம்" என காலை உணவுக்கு அமரச்செய்தார். இட்டிலியும் கேழ்வரகில் தோசையும், ஏதோ ஒரு சிறுதானியக் கஞ்சியும்", என அவ்வளவு சுவையான உணவு சுத்தமான பரிமாறலில்.
"எங்க மருத்துவமனைக்கு வாங்க; அங்க போகலாம்" என அழைத்துச் சென்ற போது அங்கே 50ரூபாய் பெற்றுக் கொண்டு அனைத்து சிறப்பு மருத்துவரையும் பார்க்க காத்திருந்த பெரும் கூட்டத்தை கடந்து மருத்துவமனையை சுற்றிப்பார்த்தோம். அனேகமாக அத்தனை சிறப்பு பிரிவும் இயங்கிக் கொண்டிருந்தன. ஒரு வாட்டி ஃபீஸ் வாங்கிட்டால் 2-3 தடவை இலவசமா வரலாம். என சொல்லிக் கொண்டே ," அறைக்கு போகலாமா?" என அவர் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். பணியாற்றும் மருத்துவருக்கான இல்லத்தில் ஒரு குட்டி போர்ஷந்தான் அவர் இல்லம். புத்தகங்கள் நிரம்பிக்கிடக்கும் 150-200 சதுர அடியில் அவர் அறையும் ஒட்டியவாறு படுக்கை அறையும். "இப்ப நான் சென் மற்றும் சொராஸ்ட்ரியஸ்ம் பற்றியும்படிக்கிறேன்..நீங்க?. என கேட்டவர், கர்ம யோகம் விவேகானந்தர் எழுதிய நூலை தன்கையொப்பமிட்டு, "இந்தாங்க தம்பி" கொடுத்தார். " ஐயா உங்களோடு புகைப்படம்?", என நான் தயங்கிகேட்க, "30 வருஷத்துக்கும்மேலாச்சு..புகைப்படத்தில் என்னை காட்டி" என்று சிரித்தார். எங்கும் தன் புகைப்படத்தை வெளியிடாத மாமனிதர் அவர்.
" தினம் 10,000 பேருக்கு உணவு, ஆயிரக்கணக்கான பேருக்கு மருத்துவ வசதி", என தான் கோடிக்கணக்கில் சம்பாதித்தவற்றின் பெரும்பங்கை தனக்கு தந்த சமூகத்திற்கு தான் வாழும் காலத்திலேயே, தான் முன் நின்று கொடுத்து உதவும் மாமனிதனைப் பார்த்த போது "இவர்தான் கடவுள். இதுவே கோயில்" என அன்று மனம் உரக்கச் சொல்லிற்று.
வீட்டின் வாசலில் ஓரத்தில் அவரது ஒரு சிறிய பழைய ஹூண்டாய் கார் அவர் நிறுத்திருந்தார், கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேல் அறத்தோடு சம்பாதித்து, அறவழியிலேயே முழுமையயாய் கொடுத்த வந்த அம்மானிதனின் கையொப்பத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். இன்று அவரின் மறைவு கண்களை பனிக்கச் செய்கிறது. இன்று கோவையின் குளிரில் ஈரத்தில், பல்லாயிரக்கணக்கான சாமனியனின் கண்ணீரும் கலந்திருக்கும்! '' என்று கூறப்பட்டுள்ளது.
Comments