2-வது நாளாக ஐ.டி.ரெய்டு ரூ.16 கோடி ரொக்கம் பறிமுதல் ?
ஈரோட்டில் பிரபல கட்டுமானம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனமான ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக நீடித்து வரும் வருமான வரித்துறை சோதனையில், கணக்கில் வராத 16 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு தங்கப் பெருமாள் வீதியில் இயங்கி வரும் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தை சகோதரர்களான சேகர், கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
கட்டுமானம் மற்றும் டிராவல்ஸ், திருமண மண்டபம், சமையல் மசாலா தயாரிப்பு என பல தொழில்களிலும் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சில ஆண்டுகளாக, வருமானத்தை குறைத்து காட்டியதோடு, சரிவர வருமான வரி கணக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை இன்னும் முடிவு பெறாத நிலையில், தற்போது வரையில், கணக்கில் வராத 16 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களும் சிக்கியயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments