'கலெக்டர் வர போவாங்கனு தெரியாது; பணத்தை திருப்பி கொடுத்துறேன்யா!'- வீட்டு உரிமையாளருக்கு 'ஷாக்' கொடுத்த மூதாட்டி

0 53957
மூதாட்டியின் வீட்டுக்கு வந்த மதுரை ஆட்சியர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்த மூதாட்டியை தனது காரில் வீட்டுக்கு அழைத்து சென்ற மதுரை ஆட்சியரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்த பாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். மக்கள் குறை தீர்க்கும் நாளான நேற்று உடல்நிலை குன்றிய நிலையில் மெல்ல மெல்ல நடந்து வந்து மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் கையில் மனுவுடன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அலுவலக வளாகத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்த மூதாட்டியை பார்த்ததும் தன் காரை நிறுத்த சொன்னார். காரில் இருந்து இறங்கிய மூதாட்டியிடம் என்ன ஏதுவென்று மாவட்ட ஆட்சியர் விசாரித்தார். மூதாட்டி தனக்கு தான் செல்வராஜ்யபுரத்தில் வசித்து வந்ததாகவும் தன்னை வீட்டை விட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதால் தற்போது கோரிப்பாளையம் பள்ளி வாசல் அருகே வசித்து வருவதாக கூறினார்.

மேலும், தான் செல்வராஜ்யபுரத்தில் வசித்து வந்த வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை வீட்டின் உரிமையாளர் தர மறுப்பதாகவும் ஆட்சியரிடத்தில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, மூதாட்டியை அமர வைத்து ஆசுவாசப்படுத்திய ஆட்சியர் அவருக்கு டீ வரவழைத்து குடிக்க சொன்னார். பிறகு, ' வீட்டுக்கு எப்படி போவீங்க ' என்று கேட்ட போது, 'ஐயா, நான் நடந்தேதான் போக வேணும் ' என்று மூதாட்டி பரிதாபமாக சொன்னார். தொடர்ந்து, ஆட்சியர் தன்னுடைய வாகனத்திலேயே மூதாட்டியை வீட்டுக்கு அழைத்து சென்றார் . மூதாட்டியின் வீட்டுக்கு ஆட்சியர் வந்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து போனார்கள்.

தொடர்ந்து. மூதாட்டியின் பிரச்னை தீர , சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடத்தில் போலீஸார் தொலைபேசியில் பேசினர். மாவட்ட ஆட்சியரே மூதாட்டியின் வீட்டுக்கு வந்திருப்பதை கேள்விபட்ட வீட்டு உரிமையாளர் திகைத்து போனார். 'கலெக்டர் வர போவாங்கனு தெரியாது , ஒரு வாரத்தில் பணத்தை திருப்பி கொடுத்துறேன்யா' வாக்குறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, உங்கள் பணம் விரைவில் உங்களுக்கு கிடைத்து விடுமென்று மாவட்ட ஆட்சியர் மூதாட்டிக்கு ஆறுதல் கூறினார். 

அப்போது, ஆட்சியரிடத்தில் தன் துயரைத்தை கூறி மூதாட்டி அழுதது சுற்றியிருந்தவர்களை கண் கலங்க வைத்து விட்டது. இதையடுத்து, மூதாட்டியின் செலவுக்காக தன் கையில் இருந்து ரூ. 5,000 வழங்கிய மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து கிளம்பி போனார். மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments