50 பேருக்கு போலி விசா போட்ட கும்பல்… மடக்கி பிடித்த வட மாநில இளைஞர்கள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்களை, பாதிக்கப்பட்டவர்களே ஒன்று சேர்ந்து ஒரே இரவில் சினிமா பாணியில் சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
ஒடிசாவை சேர்ந்த ராஜூ என்பவன் அதே மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 பேருக்கு, மலேசிய நாட்டில் கட்டிட வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளான். அனைவரையும் விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்து முன்பணமாக சுமார் 10 ஆயிரம் ரூபாயை வசூல் செய்தவன், மலேசியாவுக்கு செல்வதற்கான முழு தொகையான 50 ஆயிரத்தில் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாய் பணத்தை விசா தயாரானதும் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளான்.
பிறகு விசா தயாராகிட்டதாக கூறிய ராஜூ, ஐம்பது பேரையும் இரு தினங்களுக்கு முன் சென்னைக்கு வரவழைத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளான். ஞாயிற்றுக்கிழமை அந்த விடுதிக்கு ராஜுவின் நண்பர்களான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ராத் குமார் போலோ என்பவனுடன் ஐந்து பேர் வந்து, அங்கிருந்த 50 பேருக்கும் மலேசிய நாட்டிற்கு செல்வதற்கான விசாவை கொடுத்திருக்கின்றனர்.
பின்னர், அனைவரிடமிருந்தும் தலா 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பணம் கொடுத்த ஐம்பது பேரில் ராஜேஷ் குமார் மதன் என்பவர் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர். அவர் தனக்கு அளிக்கப்பட்ட விசாவில் உள்ள பார்கோடை அருகில் உள்ள இன்டர்நெட் மையத்தில் கொண்டு சென்று சோதித்துப் பார்த்துள்ளார்.
அதில் மலேசியா செல்வதற்கான எந்த விவரங்களும் வராததால் அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுப்ராத் குமார் போலோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது உடனடியாக அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு நேரில் வருவதாகவும், அதற்கு முன்பாக வேறு இன்டர்நெட் மையத்தில் சென்று சோதியுங்கள் எனவும் கூறியுள்ளான்.
மற்றொரு இன்டர்நெட் மையத்தில் விசா பார்கோடை சோதனை செய்தபோதும் எந்தவித தகவலும் வரவில்லை. இந்த முறை சுப்ராத் குமார் போலோவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவனது செல்போன் உட்பட கூட்டாளிகள் அனைவரது செல்போன்களும் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுதாரித்த 50 பேரும் தியாகராய நகர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையம், விமான நிலையம் என ஐந்து குழுக்களாக பிரிந்து தேடியுள்ளனர். இதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தேடிக் கொண்டிருந்த குழுவின் கண்களில் சுப்ராத் குமார் போலோ உட்பட ஐந்து பேரும் சிக்கினர். அவர்கள் பெங்களூருக்கு தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. 5 பேரையும் துரத்தியபோது மூன்று பேர் தப்பியோடிய நிலையில், ராஜேஷ்குமார் பாண்டா, தினேஷ் பட்ரா என இருவர் மட்டும் சிக்கினர்.
பிடிபட்ட இருவரையும் உடனடியாக அருகில் உள்ள கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய கோயம்பேடு போலீசார், சம்பவம் நடைபெற்ற அனைத்து இடங்களும் பூக்கடை காவல் மாவட்டதிற்கு உட்பட பகுதி என்பதால் பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் வெளிவந்த “வெற்றிக் கொடிகட்டு” திரைப்படத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் வில்லனை, பாதிக்கப்பட்டவர்கள் தேடிப்பிடித்து போலீசில் ஒப்படைப்பர். அதே பாணியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜண்டுகளின் பின்னணியை கவனமாக ஆராய்ந்த பிறகு பணம் செலுத்த வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.
Comments