சென்னையில் காலையில் காண்பது பனி மூட்டம் அல்ல, புகை மூட்டம்!
சென்னையில் கடந்த ஒரு வார காலமாக விடியலுக்கு பின்னரும் பனி அகலாது தொலைவில் புகை மூட்டமாக தென்படுவதும், காற்று மாசு அதிகரித்திருப்பதும் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்து மார்கழி தொடக்கத்தில் தமிழகத்தில் பனி பொழிய தொடங்குவது காலநிலை இயல்பு. தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே பனி பொழிவு அதிகம் இருப்பது போன்று குளிர் உணரப்படுகிறது. காலை 9 மணி வரையிலுமே சாலைகளில், உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பார்க்கும் பொழுது தொலைவில் புகை மூட்டமாக காணப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ள அதே வேளையில் காற்றின் திசை சாதகமாகவும், காற்றின் வேகம் பலமாகவும் இருந்தாலும், தரைக் காற்று இல்லை. எனவே, பகலில் சூரிய வெப்பத்தால் உண்டாகும் நீராவி மேலெழும்பாமல் தரைப் பகுதிக்கு நெருக்கமான தொலைவிலேயே நிலவுகிறது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அதிகம் குளிர்வது போன்று உணர்வு உண்டாகிறது என்று விளக்கம் அளிக்கிறது, வானிலை ஆய்வு மையம்.
காலை நேரத்தில் அதிகபட்சமாக 100 விழுக்காடு வரை உள்ள ஈரப்பதம் பகலில் வெப்பநிலை அதிகரிக்கும் வரையில் நீடிப்பதால், காற்றில் உள்ள மாசு ஈரப்பதத்தால் உறிஞ்சப்பட்டு தரைப்பகுதி விட்டு மேலெழும்பாமல் நீடிக்கிறது. இதனால் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவீட்டின்படி சென்னையில் நேற்று சராசரியாக நுண்துகள்களின் அளவு 130 ஆக அதிகரித்து, காற்றின் தரம் குறைந்துள்ளது. கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு காற்று மாசு இல்லாவிட்டாலும், வளிமண்டலம் மேலும் மேலும் மாசுபடுவதை தடுக்காவிட்டால், சென்னை நாளைய டெல்லியாக மாறிவிடுமோ என்ற அச்சத்திலும் நியாயம் உள்ளதை மறுக்க முடியாது.
Comments