3 குழந்தைகள் கொலை... பெற்றோர் தற்கொலை... கடன் சுமையால் நேர்ந்த சோகம்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே 3 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கலந்த நூடுலிஸை கொடுத்து, தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் சுமையால் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கு விமலேஸ்வரி என்ற மனைவியும், ராஜஸ்ரீ, நித்யஸ்ரீ, சிவபாலன் என 3 குழந்தைகளும் இருந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தச்சு தொழில் முடங்கி போகவே, குடும்பத்தின் வறுமையை சமாளிக்க மோகன் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்திடம் (sriram shit funds) இருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
அதற்கு பின்னரும், மோகனின் தச்சு தொழில் சொல்லிக்கொள்ளும்படியாக அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால், வாங்கிய கடனை திரும்பி செலுத்த வழியின்றி தவித்த மோகன், கடந்த ஒரு வாரமாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்றிரவு, குழந்தைகள் மூவருக்கும் மயக்க மருந்து கலந்த நூடுல்ஸை கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர்.
பின்னர், ஒரு அறையில் குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்று விட்டு, மற்றொரு அறையில் தாயும், வீட்டு வளாகத்தில் தந்தையும் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
காலையில் வெகு நேரமாகியும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில், எதேச்சையாக விமலேஸ்வரியின் தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குழந்தைகள் உட்பட 5 பேரும் தூக்கில் தொங்கியபடி சடலங்களாக கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டுள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் வந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குடும்பத்தையே பறிகொடுத்த சோகத்தில் விமலேஸ்வரியின் தந்தையும், அக்காளும் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.
கடன் கொடுத்தவர்கள் மோகன் வீட்டிற்கு வந்து தொல்லை செய்தார்களா? மோகன் வாங்கியிருந்த கடன் தொகை எவ்வளவு என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments