புதருக்குள் குழந்தை ... தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய திருவாரூர் பெண்!
புதருக்குள் குழந்தையை தாய் வீசி சென்ற நிலையில் மீட்ட இளம் பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுத்து ஆசுவாசப்படுத்திய சம்பவம் திருவாரூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் கீழகொத்ததெருவில் பிறந்து சிலமணிநேரமே ஆன பெண்குழந்தை முள்புதரில் யாரோ வீசி விட்டு சென்றுள்ளனர். முள்செடிகள் நிறைந்த புதருக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, புதருக்குள் சென்று பார்த்த போது, அழகிய பெண் குழந்தை வீல் என்று கத்தியவாறு அழுது கொண்டிருந்தது. இந்த காட்சியை கண்ட மக்கள் பதறிப் போனார்கள்.
உடனடியாக குழந்தையை மீட்ட ரம்யா என்ற இளம் பெண் அதற்கு தாய்ப்பால் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர், குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்று வெந்நீரில் குளிப்பாட்டி சுத்தப்படுத்தி புதிய ஆடை அணிவித்தார். ரம்யாவின் கருணைமிக்க நற் செயலுக்கு அக்கம் பக்கத்தினர் உதவியாக இருந்தனர். இந்த செய்தி பரவியதையடுத்து ஏராளமானோர் ரம்யா வீட்டுக்கு வந்து குழந்தையை பார்த்து சென்றனர். ரம்யாவுக்கு 2 மாத கைக்குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சிளம் குழந்தையை இப்படி வீசி செல்ல எப்படித்தான் மனம் வருகிறதோ என்று பெண்கள் வேதனைப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை வீசி சென்றது யார் என்றும் விசாரித்து வருகின்றனர். தற்போது, குழந்தை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இளம் பெண் ரம்யாவின் கருணைமிக்க செயலை பொதுமக்களும் போலீஸாரும் வெகுவாக பாராட்டினர்.
Comments