பீரோவை உடைக்க முடியாமல் டயர்டான திருடன்... போதையில் உறங்கியதால் தெளிய வைத்து 'கவனிப்பு'
சென்னை ஆதம்பாக்கத்தில் திருட சென்ற வீட்டில் பீரோவை உடைக்க முடியாமல் அங்கேயே தூங்கிய திருடனால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை ஆதம்பாக்கம் அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஆனந்தி. இருவரும் சேர்ந்து கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகின்றனர். நேற்று காலையில் அதே பகுதியில் சமையல் செய்வதற்காக இருவரும் சென்றுள்ளனர். வேலை முடிந்து பிற்பகல் 2 மணி அளவில் ஆனந்தி மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பிறகு பயந்த நிலையில் உள்ளே சென்று ஆனந்தி பார்த்தபோது பீரோவை உடைக்க முயற்சித்து உடைக்க முடியாததால் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் ஆனந்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அவரை எழுப்ப முயற்சிக்க அவர் அளவுக்கடந்த மதுபோதையில் இருந்தும் அந்த நபர் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த நபருக்கு போதையை தெளிய வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட திருடன் ஆலந்தூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. செலவுக்கு கையில் பணமில்லாத நிலையில், மது அருந்தி விட்டு ஆனந்தியின் வீட்டுக்கு திருட சென்றுள்ளர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும் பீரோவை பல நேரமாக உடைக்க முயற்சி செய்தும் உடைக்க முடியாததால் அடித்த மது போதை தலைக்கேறியதால் டயர்டாகி அங்கேயே தூங்கியதாக தெரிய வந்துள்ளது.
Comments