விவசாயிகள் தொடர் போராட்டம்... உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

0 1497
டெல்லியில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண்பது தொடர்பாக அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

டெல்லியில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண்பது தொடர்பாக அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய ஒப்புக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று விவசாய சங்கங்கள் நிபந்தனை விதித்துள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களுடன் அமித் ஷாவை சந்தித்த நரேந்திர சிங் தோமர் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். விவசாயிகள் இன்று முதல் டெல்லி ரயில் பாதையை மறியல் செய்ய உள்ளதால் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் இந்தஆலோசனையில் பங்கேற்றார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினரும் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், தானும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்கப் போவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் சிறைத் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் அரசுக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை.

ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியை நோக்கி திரண்டு வந்த பல ஆயிரம் விவசாயிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து டெல்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையின் இருவழித்தடங்களிலும் போக்குவரத்து முடங்கியது. பல நூறு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.டெல்லிக்கு வரும் அனைத்துப் பாதைகளையும் இன்று மறியல் செய்ய இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments