நீண்ட இழுபறிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் கைமாறிய புதையல்

0 4127

500 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் - உத்திரமேரூர் குழம்பரேஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல் நகைகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் குழம்பரேஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகளை வருவாய்த்துறை அனுமதியின்றி பொதுமக்களே தொடங்கியுள்ளனர். ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கருவறை நுழைவு வாயிலின் முன்புள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றிய போது, துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டையில் சுமார் 100 சவரன் அளவிலான ஆபரணங்களும், நாணயங்களும் இருந்தன. 

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புதையலை ஒப்படைக்க கிராமத்தினர் மறுத்தனர். அந்த நகைகளை கோவிலிலேயே வைத்து புதைக்க வேண்டும் என அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகளும் போலீசாரும் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் புதையலை ஒப்படைக்க மறுத்த ஊர்மக்கள், பேச்சுவார்த்தையை புறக்கணித்து பாதியிலேயே எழுந்து சென்றனர்.

இடையில் மூதாட்டி ஒருவர் சாமி வந்தவராக எழுந்து நகைகள் ஊரை விட்டு எடுத்துச் செல்லப்பட்டால், ஊர் மக்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கூறி ஆவேசமாக ஆடத் தொடங்கினார்.

புதையலை ஒப்படைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போலீசாரின் எச்சரிக்கைக்குப் பணிந்த ஊர்மக்களில் ஒரு தரப்பினர் நகைகளை எடுத்துச் செல்ல சம்மதித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் முன்னிலையிலேயே நகைகள் கணக்கெடுக்கப்பட்டு, பெட்டகம் ஒன்றில் வைத்து சீலிடப்பட்டது. மொத்தம் 70 தங்க பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடிதம் ஒன்றையும் அவர்களிடம் ஊர்மக்கள் எழுதி வாங்கிக் கொண்டனர்.

அதே நேரம் மற்றொரு தரப்பினர், கும்பாபிஷேகத்தின் போது நகைகளை கொண்டு வருவோம் என எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசிக்க வேண்டும் என கோட்டாட்சியர் கூறியதால், நகைப்பெட்டகம் வைக்கப்பட்ட போலீசாரின் வாகனத்தையும் கோட்டாட்சியர் வாகனத்தையும் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டாட்சியர் வித்யா, வாகனத்தை விட்டு இறங்கி 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வட்டாட்சியர் அலுவலகம் சென்று சேர்ந்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஆலோசனை நடத்திய கோட்டாட்சியர் வித்யா, கும்பாபிஷேகத்தின் போது நகைகள் கோவிலுக்கு எடுத்து வரப்படும் என ஊர்மக்களுக்கு எழுத்துப்பூர்வமான உறுதியை அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments