அத்துமீறும் சீனா-அடங்க மறுக்கும் இந்தியா..!
கிழக்கு லடாக்கில் எல்லை குறித்த புதிய வரையறைகளை உருவாக்கியுள்ள சீனா, அதை இந்தியா ஏற்றால் மட்டுமே இருதரப்பு உறவுகள் சீரடையும் என கூறுகிறது. ஆனால் கல்வான் தாக்குதலுக்கு முந்தைய எல்லை நிலைமை தொடர்ந்தால் மட்டுமே அது பற்றி பேச முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இது பற்றிய ஒரு தொகுப்பு...
எல்லையில் அமைதி நிலவ வேண்டுமானால் சீன ராணுவத்தின் மீது மென்மையான அணுகுமுறையை கையாள வேண்டும் என முன்பு மத்தியில் ஆண்ட அரசுகள் கருதின. ஆனால் அதை இந்தியாவின் பலவீனமாக சீனா கருதியது. எனவே காரகோரத்தில் உள்ள சாக்ஸ்காம் பள்ளத்தாக்கு முதல் அருணாச்சலில் உள்ள கிபித்து வரையிலான எல்லையை மாற்றி அமைக்க அது திரும்ப திரும்ப முயற்சித்து வருகிறது.
சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் பற்றி இந்தியா ஏதாவது கருத்து தெரிவித்தாலோ, அல்லது இந்திய தலைவர்கள் அருணாச்சலுக்கு பயணம் செய்தாலோ அது குறித்து சீனாவின் சாதாரண வெளியுறவு அதிகாரிகள் கூட விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. புத்த துறவியான 14 வது தலாய் லாமாவை தீவிரவாதி என சீனா அழைக்கிறது.
ஆனால் இந்தியாவில் பலரது படுகொலைகளுக்கு காரணமான, நாடாளுமன்ற தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் ஜெய்ஷே முகம்மது தீவிரவாதி மசூத் அசாரை ஒரு ஆன்மீக-அரசியல் தலைவராக சீனா சித்தரிக்கிறது, அவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா ஐ.நா.வில் நான்கு முறை தடை போட்டது.
இதனிடையே இந்திய பகுதிகளில் அத்துமீறிய இடங்களை உள்ளடக்கி புதிய அசல் கட்டுப்பாட்டு எல்லையை ஏற்படுத்தி உள்ள சீனா, அதை இந்தியா ஏற்றால் மட்டுமே இருதரப்பு உறவை சீரமைக்க முடியும் என கூறியுள்ளது. ஆனால் கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவும் 4 இடங்களில் இருந்து படைகளை முழுவதுமாக வாபஸ் பெற்று, 2020 ஏப்ரலுக்கு முந்தைய நிலைமையை கொண்டு வரவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
Comments