மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழுடன் பங்கேற்பு... மாணவி, தந்தை மீது வழக்கு

0 5638
மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழுடன் பங்கேற்பு... மாணவி, தந்தை மீது வழக்கு

நீட் தேர்வில்  வெறும் 27 மதிப்பெண்களே பெற்றநிலையில், 610 மதிப்பெண் எடுத்த இன்னொரு மாணவியின் சான்றை தனது சான்று போல போலியாக தயாரித்து கலந்தாய்வில் பங்கேற்றதாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி, தந்தை மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

2020 - 2021 கல்வியாண்டின் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 7-ந்தேதி ஹிர்த்திகா என்ற பெயரில் 2 மாணவிகள் கலந்து கொண்டதையும், அந்த 2 பேரும் ஒரே மதிப்பெண் சான்றை பயன்படுத்தியதையும் ஆய்வுக் குழு கண்டுபிடித்து விசாரணை நடத்தியது.

அதில் ஒருவர்தான் உண்மையான ஹிர்த்திகா என்பதும், இன்னொரு மாணவி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்சா என்பதும், அவர் நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்களை மட்டுமே பெற்ற நிலையில், 610 மதிப்பெண் எடுத்த ஹிர்த்திகாவின் சான்று போல போலியாக தயாரித்து முறைகேடாக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்ததும், பின்னர் ஆள்மாறாட்டம் செய்து கலந்தாய்வில் கலந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில் மாணவி தீக்சா, தந்தை பாலசந்திரன் மீது போலி ஆவணங்களை புனைந்து ஆள்மாறாட்டம் செய்தல், போலி ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த முறைக்கேட்டிற்கு வேறொரு மாணவியின் மதிப்பெண் சான்றை எவ்வாறு எடுத்தனர் என சந்தேகம் எழுந்துள்ளது.

தேசிய தேர்வு மையத்தின் இணையதளத்தில் மாணவர்களின் வரிசை எண், பிறந்த தேதியுடன், அவரவருக்கு கொடுக்கப்பட்டு "செக்யூரிட்டி பின்" எண்ணை பயன்படுத்தினால் தான் மதிப்பெண் சான்றை பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஆதலால் ஏதோ ஒரு நீட் பயிற்சி மையத்தின் மூலமாகவோ அல்லது இடைத்தரகர் மூலமாகவோ சான்றை பதிவிறக்கம் செய்திருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே உடந்தையாக செயல்பட்ட நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட மாணவி மற்றும் அவரது தந்தைக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments