நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - ஆர்டிஓ விசாரணை நாளை தொடக்கம்
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை நாளை தொடங்கவுள்ளது.
சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகை சித்ரா, நசரத்பேட்டை அருகேவுள்ள, ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் சொகுசு வில்லாவில் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில், நாள்தோறும் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த வழக்கில் சித்ரா தற்கொலை செய்தபோது அந்த அறைக்கு வெளியே சொகுசு விடுதியில் இருந்த கணவர் ஹேம்நாத்தை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 5ஆவது நாளாக இன்றும் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுபோல் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், இதில் ஹேம்நாத் தெரிவித்ததற்கு மாறான தகவல்கள் கிடைத்தால் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிய வாய்ப்பிருப்பதாக சொல்லபடுகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் ஆர்டிஓ தனது விசாரணையை நாளை திங்கட்கிழமை தொடங்கவுள்ளார். முதல்கட்டமாக, சித்ராவின் பெற்றோரிடமும், பின்னர் ஹேம் நாத்தின் பெற்றோரிடமும் அவர் விசாரணை செய்ய உள்ளார்.
Comments