தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு... 499 தேர்வு மையங்களில் நடைபெற்றது

0 5028
தமிழகம் முழுவதும் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான 2-ம் நிலை காவலர் தேர்வு இன்று நடைபெற்றது.

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு தேர்வு நடைபெற்றது.

காலை 11 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.10 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் ஹால்டிக்கெட் மற்றும் எழுதுபொருட்கள் மட்டும எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 42 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள் என மொத்தமாக 37,550 பேர் தேர்வு எழுதினர்.

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் 20 பேர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் முழுவதும் 20880 பேர் தேர்வெழுதினர்.

நெல்லை மாவட்டத்தில் 21 மையங்களில் நடைபெற்ற எழுத்து தேர்வில் 20ஆயிரத்து 688 பேர் பங்கேற்றனர். தேர்வு மையங்களில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலும் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. மொத்தமாக 8 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில், 12,484 பேர் பங்கேற்றனர். இதில், 1645 பேர் பெண்கள் ஆவர்.

சேலம் மவாட்டத்தில் 17 மையங்களில் நடைபெற்ற 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில், 24,278 பேர் பங்கேற்றனர். இதில் 3,179 பேர் பெண்கள் ஆவர். முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. 

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி உள்பட 35 மையங்களில் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. 29,981 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எத்திராஜ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments