இந்தியாவின் முதல் சூரிய ஒளி மினியேச்சர் ரயில்… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!
திருவனந்தபுரத்தின் அருகேயுள்ள சுற்றுலா தளமான வெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மினியேச்சர் ரயில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
கடவுளின் தேசமான கேரளா இந்தியாவில் சுற்றுலா தளங்கள் நிறைந்த மாநிலங்களுள் ஒன்றாகும். அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள வெளி கிராமம் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரக்கூடியது. சுற்றுலா துறைக்கு மொத்தம் 120 கோடி ரூபாய் ஒதுக்கிய அம்மாநில அரசு சுமார் 60 கோடி ரூபாய் வெளி கிராமத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது.
வெளி கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கேரள அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளி கிராமத்தில் இந்தியாவின் முதல் சூரிய ஒளியில் இயங்கும் மினியேச்சர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் ஏழரை கோடியில் இங்கு கட்டப்பட்டுள்ள நகர்புறப் பூங்கா மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
இரண்டரை கிலோ மீட்டர் வரை ஓடும் இந்த சூரிய ஒளி ரயில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்துள்ளது. மூன்று பெட்டிகளுடன் ஓடும் இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 45 பேர் பயணிக்க முடியும். செயற்கை நீராவி என்ஜின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் சுற்றுசூழல் பாதிக்காத வகையில் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி ரயில் மூலம் அரபி கடலோரம் அமைந்துள்ள வெளி கிராமத்தின் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க முடியும்.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் சுற்றுலாத் தளமான வெளி கிராமத்தில் தற்போது வெறும் 40 சதவிகித பணிகளே முடிந்துள்ளன. மேலும் இங்கு திறந்த வெளி திரையரங்கம், கேரளா மாநிலத்தின் கலாச்சாரத்தை விவரிக்க கூடிய வகையில் கலைக்கூடம் ஆகியவையும் அமையப்பட இருக்கின்றன. மீதமுள்ள பணிகளும் முடிவடையும்போது கேரளாவில் வெளி கிராமம் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக அழகுடன் காட்சியளிக்கும்” என்று கூறியுள்ளார்.
Comments