பாரிஸ் ஒப்பந்தம் தொடர்பான இலக்கையும் தாண்டி செயல்பட நடவடிக்கை... பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் உறுதி
பருவ நிலை மாற்றம் விவகாரத்தில் பாரிஸ் உடன்படிக்கை தொடர்பான இலக்கையும் தாண்டி செயல்படுவோம் என்று பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2005ம் ஆண்டை ஒப்பிட்டால் இந்தியாவின் கரியமில வாயுவின் அடர்த்தி 21 சதவீதம் குறைந்திருப்பதாக கூறினார்.
எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ள இலக்குகளையும் தாண்டி இந்தியா செயல்படும் என்று உறுதியளித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பாரீஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, சர்வதேச நாடுகள் இந்தியாவிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என்றார். உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இந்தியா மிகக்குறைந்த அளவே காரணமாக இருக்கும் என்றும் மோடி தமது சுருக்கமான உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.
Comments