மீன்களை காக்க அணைகளை உடைக்கும் அமெரிக்கா..!
சால்மன் மீன்களின் அழிவை தடுத்து பூர்வகுடி மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க அமெரிக்காவில் 4 மிகப்பெரிய நீர்மின் திட்டங்களுக்கான அணைகளை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓரிகான் மற்றும் கலிபோர்னியா எல்லையில் ஓடுகிறது கிளாமத் நதி. இந்த நதியோரம் வசிக்கும் யுரோக் பூர்வகுடி மக்கள் காலங்காலமாக மீன்பிடித்து வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால், இந்த நதியில் நீர்மின்திட்டம் வாயிலாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டு 1900 முதல் 1962 வரையிலான கால கட்டத்தில் 8 பெரிய அணைகள் கட்டப்பட்டன.
இதனால், இனப்பெருக்கத்திற்காக நதியின் எதிர் திசை நோக்கி கடலில் இருந்து வரும் சால்மன்களின் பயணம் தடைபட்டு அந்த இனம் அழியும் ஆபத்து உருவானது. அதே போன்று அணைகளின் காரணமாக நதியின் கீழ்மட்டத்தில் நீரின் அளவு குறைவதும் சால்மன்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளுக்கு எமனாக மாறியதாக கூறப்படுகிறது.
அதே போன்று அணை கட்டுவதால் நீர் செல்வது கட்டுப்படுத்தப்பட்டு, மீன்களின் உணவான மிதக்கும் கழிவுப் பொருட்களும் கிடைக்காமல் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காரணங்களால், ஒரு காலத்தில் சால்மன் மீன்களின் 3 ஆவது மிகப்பெரிய தங்குதளமாக இருந்த இந்த நதியில் இப்பொது அவற்றின் எண்ணிக்கை அரிதாகி விட்டது.
எனவே இந்த அணைகளை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து அது தொடர்பாக நீண்டகாலம் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு வழியாக 4 அணைகளை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், குறிப்பாக அழிந்து வரும் மீன் இனங்களை பாதுகாக்கவும் அமெரிக்காவில் இதுவரை 1700 க்கும் அதிகமான அணைகள் உடைக்கப்பட்டுள்ளன.
Comments