ரூம் போட்டு யோசிப்பாங்களோ... அரசுக்கே தெரியாமல் மீன் வளர்க்க ஏரிகள் ஏலம்!- குஞ்சுகளுடன் வந்த மீன்வியாபாரி ஓட்டம்
அரசு அதிகாரிகளுக்கு தெரியாமலேயே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மீன் வளர்க்க ஏலம் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுமயிலூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறை யினருக்கு சொந்தமான ஏரி உள்ளது. ஏரி மீன்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் ஏரியில் மீன்களை வளர்க்க அரசு குத்தகைக்கு விடுவது வழக்கமானது. மீன் வியாபாரிகள் ஏரிகளை குத்தகைக்கு எடுத்து மீன்களை வளர்த்து விற்பனை செய்வார்கள். இந்த நிலையில் சிறுமயிலூரில் 145 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியை சில மர்ம நபர் கள் பொதுப்பணித்துறையினருக்கு தெரியாமல் ஏலம் விட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் இந்த ஏரியை ஏலம் எடுத்துள்ளார். தொடர்ந்து, நேற்று அந்த மீன் வியாபாரி ஏரியில் மீன் குஞ்சுகளை விட முடிவு செய்தார்.
சுமார் 10 லட்சம் மதிப்புள்ள மீன் குஞ்சுகளை லாரியில் கொண்டு வந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி ஏரியில் மீன்களை விட அனுமதிக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர். தான் ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து ஏரியை ஏலம் எடுத்திருப்பதாக அந்த மீன் வியாபாரி கூறினார். ' உங்களுக்கு யார் ஏரியை ஏலம் விட்டது' என்று கேட்டு பொதுமக்கள் அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். ஏரிக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏலம் எடுத்த மீன் வியாபாரியிடத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர், 'இந்த ஏரி அரசுக்கு சொந்தமானது. நாங்கள் ஏலம் விடவில்லை. அப்படியிருக்க , நீங்கள் எப்படி மீன் வளர்க்க முடியும்' என்று மீன் வியாபாரியை எச்சரித்தனர். பிறகு, ஏரியில் உபரி நீர் வெளியேறும் பகுதியில் மீன்கள் வெளியேறாத வண்ணம் கட்டி வைத்திருந்த வலைகளை அதிகாரிகள் அறுத்தெறிந்தனர். இதையடுத்து, ஏரியின் மீன் வளர்க்க வந்த நபர் லாரியுடன் எஸ்கேப் ஆனார். ஏரியை ஏலம் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள 5 ஏரிகளை மர்ம நபர்கள் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் ஏலம் விட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.
Comments