கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தல் வழக்கு: சினிமா பாணி துரத்தல்.. சிக்கிக் கொண்ட குற்றவாளி..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, போலீசார் 20 கிலோமீட்டர் தூரம் காரில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் 65வயது வாத்தூர் பிரகாஷ். முன்னாள் ஜவுளித்துறை அமைச்சரான இவர் நவம்பர் 22ஆம் தேதி கோலாரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று வரும் வழியில் மர்மநபர்களால் கடத்தப்பட்டார். கடத்தல் கும்பல் பிணைத் தொகையாக 44லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டபின், 26ஆம் தேதி கோலார் அருகே இறக்கி விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடகா போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தேடியதில் ரோகித் அலியாஸ் என்பவனை கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான ரவிராஜ் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பதுங்கி இருப்பதையும் தெரிந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ரோகித் அலியாஸை அழைத்துக் கொண்டு சாத்தூர் வந்த கர்நாடக போலீசார் ரவிராஜுடன் ரோகித் அலியாஸை செல்போனில் பேசச் செய்து அங்குள்ள சுங்கச்சாவடி அருகே வரவழைத்துள்ளனர்.
கர்நாடக பதிவெண் கொண்ட காரில் அங்கு வந்த ரவிராஜ், போலீசார் தன்னைப் பிடிக்க திட்டம் தீட்டியதை அறிந்து ரோகித் அலியாஸையும் ஏற்றிக் கொண்டு காரில் தப்பித்துள்ளார். சுதாரித்த கர்நாடக போலீசார், ரவிராஜின் காரை துரத்திச் சென்றனர்.
20கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து சென்ற நிலையில் இ.ரெட்டியாபட்டி கிராமத்தில் பள்ளத்தில் ரவிராஜின் கார் சிக்கியது. துரத்தி வந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு ரவிராஜை மடக்கி பிடித்தனர்.
அப்போது ரோகித் அலியாஸ் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிய நிலையில் ட்ரோன் கேமரா மூலம் அந்த பகுதியை கண்காணித்ததில் ரோகித் அங்கில்லை என்பதை உறுதி செய்த பின்னர் ரவிராஜை கைது செய்து அழைத்து சென்றனர். தலைமறைவான ரோகித் அலியாஸையும் தேடி வருகின்றனர்.
Comments