நீதிமன்றம் எச்சரித்தும் அடங்கவில்லை.! லஞ்சம் வாங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கைது.!
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், லஞ்ச வாங்கி கைதான நிலையில், கணக்கில் வராத சுமார் 63 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரைஸ் மில் லைசென்ஸ் புதுப்பிக்க லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாக சிக்கி கம்பி எண்ணுகிறார்.
தமிழ்நாட்டில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டு காணப்படுவதாகவும், டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு, நீதிமன்றமே எச்சரித்தும், அடங்காபிடாரிகள் போல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளில் சிலர் செயல்படுவது, திருவாரூர் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
திரூவாரூர் மாவட்டம் தண்டலையில் உள்ளது நிவேதா அரிசி ஆலை. இதற்கான லைசென்சை புதுப்பிக்க, நாகப்பட்டினம்-திருவாரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தன்ராஜிடம், அரிசி ஆலை அதிபர் துரைசாமி விண்ணப்பித்தபோது, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பான புகாரில், தன்ராஜ் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெறும்போது, கையூட்டு ஒழிப்புக் காவல்துறையினர், வியாழக்கிழமையன்று அவரை மடக்கிப் பிடித்தனர்.
அந்த அதிகாரி மீது, ஏற்கனவே, கட்டுக்கடங்காத லஞ்ச புகார்கள் வட்டமிட்டதால், ஒரே நேரத்தில், தன்ராஜ் தங்கியிருந்த நாகப்பட்டினம் அறை, சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீடு ஆகியவற்றிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார், இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
நாகப்பட்டினத்தில், தன்ராஜ் தங்கியிருந்த அறையில், 3 லட்சத்து 44 ஆயிரத்து 510 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதேநேரத்தில், சென்னை ஊரப்பாக்கத்தில் தன்ராஜ் வீட்டை சல்லடை போட்டு சலிப்பதுபோல், அங்குலம், அங்குலமாக சோதனையிட்ட அதிகாரிகள், 56 லட்சத்து 61 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அடுத்தடுத்து, பணம் கைப்பற்றப்பட்டதோடு, தன்ராஜின் சொத்து குவிப்பை கண்டு மலைத்துபோயுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கையும் பதிய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், லஞ்சம் வாங்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தன்ராஜை ஆஜர்படுத்தி, திருத்துறைப்பூண்டி கிளைச் சிறையில் அடைத்தனர். தன்ராஜ், ஊரப்பாக்கம் வீடு, நாகப்பட்டினம் அறை உள்ளிட்டவற்றில் கைப்பற்றப்பட்ட 62 லட்சத்து 71 ஆயிரத்து 510 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Comments