நெருக்கமான காட்சி விரிசலை ஏற்படுத்தியதா? டிவி நிகழ்ச்சி இயக்குநர் உள்ளிட்டோரிடம் விசாரணை.!
நடிகை சித்ரா மரணம் தொடர்பாக, குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த நசரத்பேட்டை அருகே, பிளசண்ட்ஸ் ஸ்டே ஹோட்டல் ரிசாட்டின், சொகுசு வில்லாவில், சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த புதன்கிழமை அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சித்ராவை, அவசர, அவசரமாக, கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்ட, அமைந்தகரை ஹேம்நாத் என்பவரிடம், 3 நாட்களாக போலீசார், துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இருப்பினும், சித்ராவின் தற்கொலை முடிவுக்கு, அவரது குடும்பத்தினரும், ஹேம்நாத்தும் காரணமாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் ஐயம் நிலவுவதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில், பிப்ரவரியில் திருமணம் செய்வதாக முடிவெடுத்து, அவசர, அவசரமா பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத், நடிகை சித்ராவின் நடிப்பு தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்த கதாபாத்திரத்துக்கு கணவராக நடிக்கும் நடிகர் முத்தம் கொடுப்பது போல காட்சி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சீரியலில் கணவர்-மனைவி கதாபாத்திரங்கள், தம்பதி சகிதமாக, மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையிலான காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதை, சித்ராவோடு, படபிடிப்புத் தளத்திற்கு சென்று வந்த ஹேம்நாத்திற்கு பிடிக்கவில்லை என்றும், இதை விரும்பாமல், நடிகையுடன் பிரச்சனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. தனது மகளை ஹேம்நாத் கட்டுப்படுத்துவதை சித்ராவின் தாயார் விரும்பாமல் சண்டையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தற்கொலை செய்யும் முன்பு கடைசியாக தாயாரிடமே சித்ரா அதிகமுறை செல்போனில் பேசியுள்ளார். அப்போது, தாயாரிடம் அவர் எதுவும் சொல்லியிருக்கலாம் என ஐயமுறும் போலீசார், அவரை விசாரிக்கவும், திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இயங்கியதால், அதில் வந்த தகவல் ஏதாவது டெலிட் ஆகியிருக்கிறதா? என்பதை கண்டறியவும், அவற்றை மீட்டெடுக்கவும், சித்ராவின் செல்போன், தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, நசரத்பேட்டை காவல்நிலையத்துக்கு, வெள்ளிக்கிழமை பிற்பகலில் வந்த, அம்பத்தூர் காவல் துணை ஆணையர் தீபா சத்யன், சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார், சித்ரா மரணம் தொடர்பாக, குடும்பத்தினரிடமும், அவரது நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடைபெறுவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், சம்பவ நாளன்று, சித்ரா கடைசியாகப் பங்கேற்ற சீரியல் படக்குழுவினர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டிவி நிகழ்ச்சி குழுவினர் ஆகியோரும், காவல்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, சித்ரா தனது வில்லாவிற்கு திரும்பும் முன்னர் பங்கேற்ற, டிவி நிகழ்ச்சியின் இயக்குநர் உள்ளிட்ட 5 பேரிடம், நசரத்பேட்டை போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அதில் படப்பிடிப்பு தளத்தில் எப்படி இருந்தார்? என்ன மன நிலையுடன் கானப்பட்டார்? கோபமாக நடந்து கொண்டாரா? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
முத்தம் உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளில் சித்ரா நடிக்கும்போது, அவருடன் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஹேம்நாத் ஏதேனும் தலையிட்டாரா? பிரச்சினை ஏதாவது செய்தாரா? என போலீசார் தரப்பில் வினவியதாக கூறப்படுகிறது.
இவர்களிடம் நடைபெற்ற விசாரணை முடிவுற்ற நிலையில், ஹேம்நாத்தின் தந்தையும், சித்ராவின் மாமனாருமான ரவிச்சந்திரனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் தொடர்ந்து நான்காவது நாளாக போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்ரா கடைசியாக பங்கேற்ற படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் அடிப்படையிலும் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments