சித்ரா தற்கொலை வழக்கு... கணவரிடம் 3ஆம் நாளாக விசாரணை

0 10745

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கணவர் ஹேம்நாத்திடம் 3ஆவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகேவுள்ள தனியார் சொகுசு விடுதியில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து குறித்து கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தியும், அவருடைய தற்கொலைக்கான காரணம் உறுதியாக கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் பதிவு திருமணம் நடந்து முடிந்த நிலையில், சீரியலில் சித்ரா நடித்த கதாபாத்திரத்துக்கு கணவராக நடிக்கும் நடிகர் முத்தம் கொடுப்பது போல காட்சி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீரியலில் கணவர்-மனைவி மிகவும் நெருக்கமாக காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதை சித்ராவின் கணவர் ஹேம்நாத் விரும்பாமல் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மகளை ஹேம்நாத் கட்டுப்படுத்துவதை சித்ராவின் தாயார் விரும்பாமல் சண்டையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் விடுதியில் தங்கியிருந்து சித்ரா படப்பிடிப்பு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் மீது சித்ரா தாயார் தெரிவித்த கொலை குற்றச்சாட்டும், ஏற்கெனவே அவர் மீதிருந்த கோபத்தின் வெளிபாடாகவே போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தற்கொலை செய்யும் முன்பு கடைசியாக தாயாரிடமே சித்ரா அதிகமுறை செல்போனில் பேசியுள்ளார். அப்போது, தாயாரிடம் அவர் எதுவும் சொல்லியிருக்கலாம் என போலீசார் நினைக்கின்றனர்.

எனவே சித்ரா தாயாரிடமும், சீரியல் குழுவினரிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி சித்ரா செல்போனில் இருந்து குறுஞ்செய்தி, அழைப்பு பதிவு ஏதேனும் அழிக்கப்பட்டிருந்தால் அதை மீட்டெடுத்து விசாரிக்கும் வகையில், ஆய்வுக்காக செல்போனை தடயவியல் துறைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே, நசரத்பேட்டை காவல்நிலையத்துக்கு இன்று பிற்பகல் அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன்  சென்றார். பின்னர் அங்கு இருக்கும் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் அவர் 1 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து விசாரணை  நடத்தி வருகிறார். 

இந்நிலையில் சித்ரா மரணம் தொடர்பாக, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்திருக்கிறார். சித்ரா வழக்கு விசாரணை என்ன நிலையில் உள்ளது என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த, காவல் ஆணையர், சித்ராவின் குடும்பத்தினரிடமும், அவரது நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடைபெறுவதாகவும், கூறியிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments