நடராஜர் கோயிலில் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு தண்ணீர் ... சோழர்களின் பிரமிக்க வைக்கும் சுரங்கக் கால்வாய் சீரமைப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் சுரங்கத்தை சீரமக்கும் பணி தொடங்கியுள்ளது.
சிதம்பரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் நடராஜர் கோயிலுக்குள் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தண்ணீர் வெளியேற வழியில்லாமல் நடராஜர் கோயிலின் உட்பிரகாரம் உள்ளிட்ட பல இடங்களில் 4 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியது. பின்னர் , வடக்கு வீதியில் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் , கோயிலில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் போனதற்கான காரணம் குறித்து நகராட்சிஅதிகாரிகள் மற்றும், வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி , கோயிலுக்கு வெளியே வடக்கு வீதியில் இருந்து சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட சுரங்கத்தில் அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டடது. கோயில் குளத்தில் இருந்து தண்ணீர் இந்த சுரங்க கால்வாய் வழியாக ஓடி தில்லை காளியம்மன் கோயில் குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து , அதிகாரிகள் முன்னிலையில் வடக்கு வீதி, தில்லை காளியம்மன் கோயில் தெரு பகுதிகளில் 8 இடங்களில் சுரங்கத்தின் மேலே இருந்த கற்களால் ஆன மூடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணி தொடங்கியது. மேலும், கால்வாய் அருகே வசித்த சிலரும் தண்ணீர் செல்ல முடியாத வகையில் செங்கள்களால் அடைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்த அடைப்புகளும் அகற்றப்பட்டன. கால்வாயை முற்றிலும் சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது.
நடராஜர் கோவிலில் பள்ளமான பகுதியான தெற்கில் இருந்து மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கால்வாய் ஒரு இடத்தில் அகலமாகவும் பின் குறுகலாகவும் என மாறி மாறி வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற இந்த அமைப்பை பயன்படுத்திள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Comments