போதைக் கும்பலுக்கு உடந்தை மருத்துவர்- ஆசிரியர் சிக்கினர்..!
கஞ்சா பொட்டலத்துக்காக, கேட்டமைன் மயக்க மருந்தை போதைக் கும்பலுக்கு பண்டமாற்று முறையில் விற்ற ஜிப்மர் மருத்துவர் மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்க முதலியார்பேட்டை போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு அங்குள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர்.
முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில், பெங்களூரைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் நத்தாலி என்பவரின் அறையை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இரண்டு போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நத்தாலியுடன் தங்கி இருந்த ஆண் நண்பரான புதுச்சேரி நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவரையும் கைது செய்தனர்.
கஞ்சா மற்றும் போதை ஊசி எங்கிருந்து கிடைத்தது என்று அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு தெரிந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் வெனியா என்பவர் ஆரோவில் பகுதியில் தங்கி இருப்பதாகவும், அவர் மூலமாக கஞ்சா மற்றும் போதை ஊசி கிடைப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து போலீசார், ஆரோவில்லில் தங்கி இருந்த ஆசிரியர் வெனியாவைக் கைது செய்தனர். ஆனால், அவரோ லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெஃலிக்ஸ் என்பவரிடம் போதை ஊசி மற்றும் கஞ்சா வாங்கியதாகத் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெஃலிக்ஸை கைது செய்து அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பெஃலிக்ஸ் தான் போதைப் பொருள் சப்ளைக்கு மூளையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் கஞ்சாவை மணிகண்டன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரிடம் வாங்கியுள்ளான். கெட்டமைன் என்ற போதை மருந்து ஊசியை ஜிப்மர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மயக்க மருந்தியல் மருத்துவர் துரைஅரசுவிடம் இருந்து வாங்கியதாகவும் தெரிவித்தான்.
மருத்துவர் துரைஅரசு கஞ்சா புகைப்பவர் என்றும், அவருக்கு கஞ்சா கொடுத்தால் அதற்கு பதிலாக அவர் கெட்டமைன் என்ற போதை மருந்து ஊசியை குறைவான விலைக்கு தருவார் என்றும், அதை தான் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும் பெஃலிக்ஸ் தெரிவித்துள்ளான்
இதனை அடுத்து போதை மருந்து ஊசி விற்பனையில் ஈடுபட்ட ஜிப்மர் மருத்துவர் துரை அரசையும் போலிசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சாப் பொட்டலங்கள், கெட்டமைன் மருந்து மற்றும் ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆரம்பத்தில் மூன்று பேர், அடுத்து 4 பேர் என மொத்தமாக இந்த சம்பவத்தில் 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொழுது போக்கு உற்சாகம் என்ற பெயரில் போதையை தேடிச்செல்லும் இளைய தலைமுறையினர் போதை எப்போதும் நம்மை அழிவுப்பாதையில் கொண்டு நிறுத்தும் என்பதை உணர்ந்து அதனை கைவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பர்ப்பு..!
Comments