நீதிமன்றத்துக்கு வெளியே சாத்தான் போலீஸ் பகிரங்க மிரட்டல்..! பூனைகளுக்கு மணிகட்டப்படுமா ?
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீஸ் கைதிகளையும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வேனில் அழைத்து சென்ற போது, அவர்கள் அங்கிருந்த செய்தியாளர்களை நாகூசும் வார்த்தைகளால் திட்டி பகிரங்கமாக மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு என சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமை காவலர் பால்துரை என்பவர் கொரோனாவுக்கு பலியானார். சிறையில் உள்ள 9 போலீஸ் கைதிகள் மீதும் 2027 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இதில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 காவல்துறையினர் கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர், கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கையும் டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 9 போலீஸ் கைதிகளும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பிற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதால் எந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என்ற உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிறையில் சிறப்பு வகுப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறைக்கு வெளியே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஒரு மாத காலமாக உங்களுடைய வழக்கறிஞர் என்ன செய்தார் ? நீதிமன்றத்தில் இதுபற்றி முறையிட்டு இருக்கலாமே ? என்று கூறிய நீதிபதி இது பற்றி பரிசீலிப்போம் என்றார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த போலீஸ் கைதிகள் வேனில் ஏறி அமர்ந்ததும், விதியை மீறி அவர்களது குடும்பத்தினரை சந்திக்க பாதுகாப்புக்கு வந்த போலீசார் அனுமதித்தனர். இதனை செய்தியாளர்கள் படம் பிடித்தனர். இதையடுத்து போலீஸ் வேனுக்குள் இருந்தபடியே ஊடகத்தினரை பார்த்து நாகூசும் வார்த்தைகளால் ஆபாசமாக உரக்க திட்டியபடி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். நிலமை விபரீதமாவதை உணர்ந்த பாதுகாப்பு போலீசார் வேனை உடனடியாக அங்கிருந்து கிளப்பிச்சென்றனர்.
சிறையில் இருக்கும் போதே பகிரங்கமாக ஊடகத்தினரை இவ்வளவு திமிராக மிரட்டும் இவர்களுக்கு பிணையோ, அல்லது வெளியில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருக்கும் அனுமதியோ வழங்கப்பட்டால் சாட்சிகளுக்கும் இது தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வரும் செய்தியாளர்களின் உயிருக்கும் நிச்சயம் அச்சுறுத்தல் ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ள பத்திரிக்கையாளர் சங்கங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் கைதிகளின் கீழ்தரமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதே போல் பத்திரிக்கையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து சாபமிட்ட தலைமை காவலர் பால்ராஜ் கொரானாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.
Comments